மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதராக தேர்வு..!

Read Time:2 Minute, 28 Second

பிரதமர் மோடி ‘மான் கி பாத்‘ நிகழ்ச்சியில் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர்  மோகனின் மகள் நேத்ரா ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதராக தேர்வாகியுள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் உள்ள சலூன் கடைக்காரர் மோகன் என்பவர் தனது மகளின் படிப்பிற்காக சேர்த்து வைத்த 5 லட்ச ரூபாயை வைத்து 5 கிலோ அரிசி, காய்கறிகள், சமையல் எண்ணெய் போன்ற மளிகை சாமான்கள் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதனை பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். தற்போது மோகனின் மகள் நேத்ராவை வளர்ச்சி, அமைதிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான UNADAP நல்லெண்ண தூதராக சிறப்பித்து அறிவித்துள்ளது. இத்தகவலை UNADAP தமது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறது. மேலும் ஜெனிவாவில் நடைபெறும் வறுமை ஒழிப்பு குறித்த மாநாட்டிலும் நேத்ராவுக்கு உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி நேத்ராவின் குறிக்கோள் படித்து முடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆவதே ஆகும்.

இது குறித்து ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான மதுரை மாணவி நேத்ரா கூறுகையில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் ஐநா கூட்டத்தில் வறுமை குறித்து பேச போவதாகவும், உலகத்திலேயே வறுமை இருக்க கூடாது எனவும் குறிப்பிட்டார்.

மாணவி நேத்ராவிற்கு ஊக்கத் தொகையாக ரூ 1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது மேற்படிப்பிற்காக வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்கு கொடுத்து உதவியதை கவுரவிக்கும் விதமாக அவருக்கு இச்சிறப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.