தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் மொத்தம் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை பெற பிரத்யேக தொலைபேசி எண்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்று அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்ப, கோவிட்- 19 நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 044- 40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித கால தாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும்.
இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டுவரும் நிலையில் கூடுதல் அழைப்புகளை கையாள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.