தமிழகத்தில் ஒரே மாதத்தில் 27,220 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, சாவு அதிகரிப்பு..!

Read Time:3 Minute, 57 Second

தமிழகத்தில் ஜூன் 8-ம் தேதி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,562 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், குவைத்தில் இருந்து வந்த 3 பேரும், கத்தாரில் இருந்து வந்த 9 பேரும் மற்றும் வெளிமாநிலங்களான மராட்டியத்தில் இருந்து வந்த 22 பேரும், டெல்லியில் இருந்து வந்த 7 பேரும், ஹரியானாவில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 42 பேருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும், தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 வயது வாலிபர் உள்பட 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த 12 பேரும், திருவள்ளூரை சேர்ந்த 2 பேரும், விழுப்புரம், காஞ்சீபுரம், ராணிப்பேட்டையை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 528 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 527 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் 1,149 பேரும், செங்கல்பட்டில் 134 பேரும், திருவள்ளூரில் 57 பேரும், வேலூரில் 33 பேரும், தூத்துக்குடியில் 26 பேரும், கள்ளக்குறிச்சியில் 20 பேரும், காஞ்சீபுரத்தில் 18 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், கடலூரில் 10 பேரும், திண்டுக்கலில் 9 பேரும், கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா 7 பேரும், ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 6 பேரும், தர்மபுரி, மதுரை, நாகப்பட்டினம், சேலத்தில் தலா 5 பேரும், விருதுநகர், விழுப்புரம், நெல்லை, தஞ்சாவூரில் தலா 4 பேரும், புதுக்கோட்டை, தென்காசி, திருவாருரில் தலா 3 பேரும், தேனி, ஈரோட்டில் தலா 2 பேரும், அரியலூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 66 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 221 முதியவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 8 நிலவரப்படி 6 ஆயிரத்து 9 பேர் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். இதுவே ஜூன் 8-ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 27,220 பேர் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது.