சீனாவை விட மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது..!

Read Time:2 Minute, 45 Second

இந்தியாவில் மராட்டியம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் சீனாவை தாண்டி உள்ளது. சீனாவில் கொரோனாவினால் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 83,040 ஆகும்.

ஆனால், மராட்டியத்தில் கொரோனா தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 528 ஆக உயர்ந்து உள்ளது.

மராட்டியத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 553 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல மாநிலத்தில் மேலும் 109 பேர் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மராட்டியத்தில் வைரஸ் நோய்க்கு பலியானவா்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 169 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதுவரை மராட்டியத்தில் 40 ஆயிரத்து 975 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் மும்பையில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவுகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும், மும்பையை கொரோனா வைரஸ் புரட்டி போட்டு இருக்கிறது. இதில் நேற்று நகரில் புதிதாக 1,311 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. அதாவது நகரில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து இருக்கிறது. அங்கு 22 ஆயிரத்து 32 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 26 ஆயிரத்து 345 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல நகரில் புதிதாக 64 பேர் ஆட்கொல்லி வைரஸ் தொற்றுக்கு பலியானார்கள்.

இதனால் மும்பையில் வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,702 ஆக அதிகரித்து இருக்கிறது. இதேபோல தானே மாநகராட்சி பகுதியில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.