சென்னையில் 400-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று உயிரிழப்பு மறைக்கப்பட்டதா…?

Read Time:3 Minute, 30 Second

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று வரையில் 349 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்த 20 பேரின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவில்லை என புகார் எழுந்தது. ஆனால், முறைப்படி இறப்பு விவரம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு வருவதாக தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் 400-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் மறைக்கப்பட்டு உள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை சார்பில் 349 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெருநகர சென்னை மாநகராட்சியின் கணக்கீட்டின் படி 700-க்கும் மேற்பட்டோர் கொரோனா உயிரிழப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்து இருக்கிறது.

இந்த குளறுபடிக்கு அதிகாரிகளுக்குள் இடையே முறையான தகவல் பரிமாற்றம் இல்லை என்பதே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது.

இந்த குழு, கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் தொடர்பாக மாநகராட்சி வசம் உள்ள அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேசுகையில், சுகாதாரத்துறை சார்பில் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உள்ள உயிரிழப்புகள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். ஆனால் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளுக்கு தினமும் மாநகராட்சியிடம் இணைந்து சரிபார்க்க வேண்டும். ஆரம்பத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனால் உயிரிழப்புகளின் கணக்கு சரிபார்ப்பதற்கு எளிதாக இருந்தது. ஆனால் தற்போது தனியார் மருத்துவமனையிலும், கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்புகளை கணக்கிடுவது பெரும் பணியாக உள்ளது. தற்போது இந்த உயிரிழப்புகள் குறித்து அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, அதில் விடுபட்டு உள்ள அனைத்து உயிரிழப்புகளும் பொது சுகாதாரத்துறையின் பதிவில் ஏற்றப்படும் எனக் கூறியுள்ளார்.