தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உயிரிழ்ப்பு..!

Read Time:2 Minute, 56 Second

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று (ஜூன் 11) 1,827 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. 23 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு நிலவர அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுவரையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு 349 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மட்டும் 279 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,372 பேர் குணம் அடைந்தனர். இதுவரையில் 20 ஆயிரத்து 705 பேர் மீண்டு உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழக மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பட்டியலில் அதிகப்பட்சமாக சென்னையில் 1,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து செங்கல்பட்டில் 127 பேரும், திருவள்ளூரில் 72 பேரும், ராணிப்பேட்டையில் 26 பேரும், திருவண்ணாமலை, மதுரையில் தலா 20 பேரும், காஞ்சீபுரம், கடலூரில் தலா 19 பேரும், திருவாரூர், நாகப்பட்டினத்தில் தலா 16 பேரும், வேலூரில் 12 பேரும், திண்டுக்கலில் 11 பேரும்.

திருச்சி, ராமநாதபுரம், சேலத்தில் தலா 10 பேரும், தஞ்சாவூரில் 8 பேரும், விழுப்புரம், சிவகங்கையில் தலா 7 பேரும், தூத்துக்குடியில் 6 பேரும், தென்காசியில் 5 பேரும், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 4 பேரும், அரியலூர், கோவை, கன்னியாகுமரி, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், பெரம்பலூர், புதுக்கோட்டை, விருதுநகரில் தலா 2 பேரும், நாமக்கல், தர்மபுரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.