கொரோனாவுக்கு எதிராக போராட கைக்கொடுக்கும் சித்த மருத்துவம்… புழல் சிறையில் 22 கைதிகள் முழுமையாக குணமடைந்தனர்..

Read Time:4 Minute, 12 Second

உலகம் முழுவதும் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நிலையே உள்ளது.

இதற்கான முயற்சிகளும், மருத்துவ பரிசோதனைகளும் உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் 10 குழுக்களாவது, தடுப்பூசியை கண்டுபிடித்து, விலங்குகள் மீதான சோதனையை முடித்து, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற நிலையில் இருக்கின்றன. பல இந்தியா நிறுவனங்கள் இதற்காக முழு மூச்சில் இறங்கி செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக போராட இயற்கை மருத்துவமும் பரிசோதனையில் உள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராட சித்த மருத்துவம் கைக்கொடுக்கிறது. சென்னை புழல் சிறையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 22 கைதிகள் சித்த மருத்துவ சிகிச்சையால் 5 நாட்களில் முழுமையாக குணமடைந்தனர் என தெரியவந்துள்ளது.

புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதில், முதியவர்கள் மற்றும் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 6 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 24 பேர் சிறையில் உள்ள வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சித்தா மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தமருத்துவ நிறுவனம், சித்த மருத்துவர் வீரபாபுவுடன் இணைந்து சிறையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளை கொடுத்தனர். தொடர்ந்து இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட 5 நாள் சிகிச்சையில் 22 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மேலும், 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், புழல் மத்திய சிறையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்பட்ட சித்தா சிகிச்சையில் அவர்கள் குணமடைந்து உள்ளனர்.

இதுபோல எஸ்.ஆர்.எம், தாகூர் மற்றும் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சித்தா மருந்துகள் மூலம் 83 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். மேலும், தாம்பரம் அருகில் 3 தனியார் கல்லூரிகளில் கண்காணிப்பு மையத்தை அமைத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது” என கூறியுள்ளார்.

சென்னையின் பிற பகுதிகளிலும் சித்தா மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்றவர்கள் குணம் அடைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.