கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதில் முழு வீச்சில் செயல்படும் நிறுவனங்கள்…!

Read Time:6 Minute, 3 Second

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவல் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வைரஸ் பரவல் நிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், தடுப்பூசியை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. இதற்கான முயற்சிகளும், மருத்துவ பரிசோதனைகளும் உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் 10 குழுக்கள் வரையில் தடுப்பூசியை கண்டுபிடித்து, விலங்குகள் மீதான சோதனையை முடித்து, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற நிலையில் உள்ளன.

இந்தியா தரப்பிலும் பல நிறுவனங்கள் இதன்கான முயற்சியில் முழுமூச்சில் இறங்கி இருக்கின்றன.
மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள எஸ்.ஐ.ஐ. என்னும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசி உருவாக்க பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இயங்கி வருகிற மாடர்னா இன்க், கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி உருவாக்குவதில் கடைசி கட்டத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் வரும் மாதத்தில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை செலுத்தி சோதிக்கப்போகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.

அதே மசாசூசெட்ஸ் மாகாணத்தில் செயல்படுகிற தி கேம்பிரிட்ஜ் பயோடெக் நிறுவனம், கொரோனா வைரசை தடுப்பதே தனது ஆய்வின் முதன்மையான குறிக்கோள் என தெரிவிக்கிறது. மக்களை மருத்துவமனைகளில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு, கடுமையான நோயை தடுப்பதே இரண்டாவது குறிக்கோள் என்கிறது.

சீனாவில் பெரிய அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான விருப்பத்தை அரசு தெரிவித்து உள்ளது. சீனாவில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வேகமாக செயல்படுகின்றன. சீனாவை பொருத்தமட்டில் 5 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளை முடித்துக்கொண்டு பொதுமக்களுக்கு செலுத்திப்பார்க்கிற நிலைக்கு வந்து விட்டன.

இவை உலகளவில் பெயர் பெற்றுள்ள அஸ்ட்ராஜெனேகா, மாடர்னா நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் போட்டி போடுகிற நிலையில் உள்ளன. இவைதான் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரிப்பதற்கு எமர்ஜென்ட் பயோசொல்யூசன்ஸ் நிறுவனம் 87 மில்லியன் டாலர் (சுமார் ரூ.652 கோடி) மதிப்பில் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

இதுபற்றி எமர்ஜென்ட் பயோசொல்யூசன்ஸ் நிறுவனம் கூறுகையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிப்பதற்கு எங்களது பால்டிமோர் நகர ஆலையில் வசதிகள் ஏற்படுத்தப்படும். இங்கு ஆண்டுக்கு பல கோடி டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும்” என்று சொல்கிறது.

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம், தனது தடுப்பூசி செயல்திறனுக்கான முதல் அறிகுறி, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் கிடைக்கும் என்று கூறுகிறது. இருப்பினும் பாதுகாப்பான, நம்பகமான, பயனுள்ள தடுப்பூசியை கொண்டு வருவதற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்பது இந்த நிறுவனத்தின் கணிப்பாக உள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தங்களது ‘ஆட் 26 கோவ்2-எஸ்’ கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த தடுப்பூசி சோதனை அடுத்த மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி விடும். முதலில் இந்த பரிசோதனையை செப்டம்பரில் நடத்த திட்டமிட்டிருந்தனர். இப்போது 2 மாதங்கள் முன்கூட்டியே மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்க இருக்கின்றனர். இந்த தடுப்பூசி அடினோவைரஸ் என்ற வைரசை அடிப்படையாக கொண்டதாகும். இந்த வைரஸ் ஜலதோஷத்தை ஏற்படுத்தக்கூடியது.

இந்த தடுப்பூசியை ஒரே நேரத்தில் இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும் செலுத்தி சோதிக்கப்போவது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கானோருக்கு பெரிய அளவில் இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதிப்பது தொடர்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்நாட்டின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்துடன் பேசி வருகிறது.

இதுபோன்று சில நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன. எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நிச்சயமாக இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதையே இவை அனைத்தும் காட்டுகின்றன. தடுப்பூசி வந்துவிட்டால் கொரோனாவிடம் இருந்து உலகமே விடுதலை பெற வழி பிறந்து விடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.