தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது…. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று…!

Read Time:3 Minute, 28 Second

தமிழகத்தில் கொரோனா வைரசின் பிடியில் சிக்குவோர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி நேற்று (ஜூன் 12) ஒரே நாளில் 1,933 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தலைநகர் சென்னையில் மட்டும் 28 ஆயிரத்து 924 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் 10 பேர், தனியார் மருத்துவமனையில் 8 பேர் என 18 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரையில் கொரோனாவுக்கு 367 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரையில் 22 ஆயிரத்து 47 பேர் குணமடைந்து உள்ளனர். 18 ஆயிரத்து 281 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு பலியானவர்கள் பட்டியலில் சென்னையில் 294 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், திருவள்ளூரில் 17 பேரும், காஞ்சீபுரத்தில் 6 பேரும், விழுப்புரம், வேலூர், மதுரையில் தலா 3 பேரும், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா 2 பேரும், திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, நாமக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மற்றும் விமான கண்காணிப்பு முகாமில் ஒருவரும் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில், ஏற்கனவே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்ன தான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், கொரோனா தொற்று மருத்துவ பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதேபோல் மற்ற அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. டாக்டர்கள் பாதிக்கப்படுவது கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.