சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 நோயாளிகளை காணவில்லை – மாநகராட்சி அதிர்ச்சி தகவல்

Read Time:2 Minute, 31 Second

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 277 நோயாளிகளை காணவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ள தகவல் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தலைநகர் சென்னை மிகவும் மோசமான பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ளது. அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவ்வாறு சென்றவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சென்னையில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 277 நோயாளிகளை காணவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ள தகவல் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று அறிகுறி அல்லது பாசிட்டிவ் நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் வாங்கப்படும். பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். அதன்பின் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் ‘பாசிட்டிவ்’ நபர்களுக்கு போன் செய்து மருத்துவனையில் சிகிச்சைக்கு வருமாறு அழைப்பார்கள்.

வீட்டின் முன்பகுதியில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் என்ற நோட்டீஸ் ஒட்டப்படும்.

ஆனால், கடந்த மே மாதம் 23-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதி வரை பாசிட்டிவ் ரிசல்ட் வந்த 277 பேரை காணவில்லை. அவர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை, போலியான முகவரியை கொடுத்து உள்ளனர் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி போலீஸ் உதவியை நாடியுள்ளது. சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் காவல்துறை அவர்கள் குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்கிறது.