கொரோனாவை தடுக்க காசநோய், போலியோ தடுப்பூசி உதவுமா…? ஆய்வு தீவிரம்….

Read Time:4 Minute, 56 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம், இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத வகையில் தற்போது வேகம் காட்டி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுப்பதற்கு இன்று வரையில் சந்தைக்கு தடுப்பூசி எதுவும் வரவில்லை. தடுப்பூசி பரிசோதனை முயற்சிகள் வெற்றி கண்டு, தயாரிப்பு நிலை உருவாக வேண்டும். அதுவும் 700 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை தயாரிப்பது என்பது எளிதான காரியமாக இருக்காது. எனவே அடுத்த ஆண்டு தான் அனைவருக்கும் வைரசுக்கு எதிரான தடுப்பூசி என்பது சாத்தியமாகும்.

அடுத்து ஆண்டு வரை காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற பொறுமை அமெரிக்காவிடம் இல்லை. அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நியுயார்க், நியுஜெர்சி போன்ற மாகாணங்களில் கொரோனா பரவல் குறைந்தாலும் அரிசோனா, வட கரோலினா, தென் கரோலினா, புளோரிடா, டெக்சாஸ் போன்ற பிற மாகாணங்களில் இப்போது வைரஸ் வேகமாக பரவுகிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி செல்கிறது. உயிரிழப்புகளும் 1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது. எனவே கொரோனா வைரசை தடுத்தாக வேண்டிய அவசரத்தில் அமெரிக்கா இருக்கிறது.

அமெரிக்க விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தடுப்புக்கு காசநோய் தடுப்பூசி அல்லது போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

காசநோய் தடுப்பூசியை கொரோனா தடுப்புக்கு கொடுத்து சோதிக்கும் பரிசோதனைகள் தொடங்கி இருக்கின்றன என்ற தகவலை ’தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக டெக்சாஸ் சுகாதார அறிவியல் மையத்தின் நுண்ணுயிர் நோய்க்கிருமி உருவாக்கம், நோய் எதிர்ப்புத்துறை பேராசிரியர் ஜெப்ரி டி சிரில்லோ கூறுகையில், “இப்போதைக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட உலகின் ஒரே வழி காசநோய் தடுப்பூசி தான்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர், கொரோனா வைரசுக்கு காசநோய் தடுப்பூசி பரிசோதனையை வழி நடத்துகிறார்.

பேசிலஸ் கால்மெட் குய்ரின் என்னும் இந்த தடுப்பூசியைத்தான் நாம் பி.சி.ஜி. என்று அழைக்கிறோம். இந்த தடுப்பூசிக்கு ஏற்கனவே அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது பாதுகாப்பானது என்பதற்கு நீண்ட கால வரலாறு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு விஞ்ஞானிகள் குழு, கொரோனா வைரசுக்கு போலியோ தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று கூறி அதை பரிசோதித்து பார்க்க முன் வந்து இருக்கிறது. இதுபற்றி அந்த குழு கூறுகையில், “ காசநோய் மற்றும் போலியோவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஏற்கனவே கோடிக்கணக்கானவர்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் உடலின் முதல் வரிசை பாதுகாப்பை புதுப்பிக்க குறைந்த ஆபத்தான வழியை வழங்க முடியும். உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு அமைப்பானது கொரோனா வைரஸ் உள்பட பலவிதமான நோய் கிருமிகளுக்கு எதிரானது” என தெரிவிக்கிறது.

கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருந்து துறை பேராசிரியரான பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அஸ்ரா ராசா, “பி.சி.ஜி. தடுப்பூசியால், பிற நோய்க்கிருமிகளை எதிர்த்துப்போராடும் திறனை மேம்படுத்த முடியும். சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு கூட இதை கொடுக்க அங்கீகரிக்கப்பட்டு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலான மருந்தினை அடையாளம் காண்பதில் விஞ்ஞானிகள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.