கொரோனா பரவலை தடுக்க ‘சைக்கிளில் போக மக்களை ஊக்குவியுங்கள்’ மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆலோசனை…

Read Time:4 Minute, 3 Second

கொரோனா பரவல் தடுக்க பொது போக்குவரத்தை தவிர்த்து சைக்கிளில் போக மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆலோசனை கூறி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கை மீறி கட்டுப்பாடு இல்லாமல் செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பரவுகிறது. மேலும், நூற்றுக்கணக்கானோரை கொன்று குவிக்கிறது. இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு என்ன வழி என்று தெரியாமல் அனைவரும் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பல மாநிலங்களில் ரெயில்கள், பஸ்கள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஓடத்தொடங்கி விட்டன. உள்நாட்டு விமான சேவையும் தொடங்கிவிட்டது. பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதால் கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க சைக்கிள் போன்ற மோட்டார் இல்லாத வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையொட்டி உலக நாடுகள் பலவற்றிலும் மோட்டார் இல்லாத வாகன பரிமாற்றங்களை ஊக்குவிக்க செய்யப்பட்டுள்ள வசதிகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. அமெரிக்காவின் தலைநகர் நியுயார்க் நகரில், சைக்கிளில் பயணிக்க வசதியாக 40 மைல் தொலைவுக்கு புதிய பாதைகள் போடப்பட்டுள்ளன, ஓக்லாண்டில் மேட்டார் வாகனங்கள் செல்வதற்கு 10 சதவீத சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

இதேபோன்று கொலம்பியாவின் பகோட்டாவில் ஒரே நாள் இரவில் சைக்கிள் சவாரி போவதற்கு வசதியகாக 76 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைத்திருக்கிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் மோட்டார் இல்லாத வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், மெட்ரோ ரெயில் நிறுவனங்களுக்கும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா கடிதம் எழுதி இருக்கிறார் .

அதில், பெரும்பாலான நகர்ப்புற பயணங்கள் 5 கி.மீ. தொலைவுக்குள் அமைகின்றன. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் மோட்டார் இல்லாத போக்குவரத்து குறைவான செலவில் அமைகிறது. இது நடைமுறைப்படுத்த எளிதானது. விரைவானது. மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததும்கூட. பொது போக்குவரத்தை பொறுத்தமட்டில், குறுகியது (6 மாதங்கள்), நடுத்தரமானது (1 வருடம்), நீண்ட காலம் (1 முதல் 3 ஆண்டுகள்) என 3 முனை மூலோபாயத்தை பரிந்துரைக்கிறோம்.

பொது போக்குவரத்தை பயணிகளின் நம்பிக்கையுடன், மீண்டும் தொடங்க வேண்டும். பொது போக்குவரத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு சரியான சுத்திகரிப்பு, கட்டுப்பாடு, தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். பொது போக்குவரத்து சாதனங்களில் ரொக்க பண பரிமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக பீம், போன்பே, கூகுள் பே, பே டி.எம்., ஆகியவற்றை (செல்போன் செயலி பண பரிமாற்றம்) பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.