சீனாவின் நிம்மதி நீடிக்காது….? கொரோனா வைரஸ் இரண்டாவது இன்னிங்ஸ்….!

Read Time:5 Minute, 10 Second

சீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பரில் உருவாகி கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடியது. தொடர்ந்து ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் அங்கு கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என சீன அரசு தெரிவித்தது. ஒரு வழியாக மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட தொடங்கினர். இந்நிலையில், அது நீடிக்காது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது மறுபடியும் அங்கொன்றும், இங்கொன்றுமாய் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் கைவரிசை காட்டத்தொடங்கியது. இப்போது அது வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. அதாவது, புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது, அந்த நாட்டை கலக்கத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. முதலில் தலைநகரான பீஜிங்கில் 3 நாட்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதை தொடர்ந்து சீனாவில் மேலும் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 3 நாட்களில் 66 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி இருக்கிறது.

இது கொரோனாவின் இரண்டாவது அலை அங்கு தொடங்கி விட்டதோ….? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

புதிதாக தொற்று பாதித்த 57 பேரில் 38 பேருக்கு உள்நாட்டில் இருந்து தொற்று பரவி உள்ளது. இவர்களில் 36 பேர் பீஜிங்கையும், 2 பேர் லியோனிங் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதித்துள்ளது. இதன்மூலம் அங்கு அறிகுறிகள் இன்றி கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ள 103 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அறிகுறிகள் இன்றி கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரைக் கண்டு சீனா அதிர்ந்து போகிறது. ஏனென்றால், இவர்கள் ஓசைப்படாமல் மற்றவர்களுக்கு கொரோனா தொற்றை பரப்பி விடுவார்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. காய்ச்சல் இருக்காது, இருமல் இருக்காது, தொண்டை வலி இருக்காது. இந்த அறிகுறிகள் இல்லாமல் இவர்கள் நடமாடுகிறபோது, அவர்களை பொதுவெளியில் காண்கிறவர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து விலகிச்செல்லவும் வாய்ப்பற்ற நிலை உருவாகும்.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடந்த சில நாட்களில் மொத்தம் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஜிங்கில் கொரோனா பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி இருப்பதால் அதிர்ந்து போன உள்ளாட்சி நிர்வாகம், கட்டுப்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. நகரில் உள்ள மொத்த உணவு, காய்கறிகள், மாமிச சந்தைகள் அதிரடியாக மூடப்பட்டு உள்ளன. சந்தையுடன் தொடர்புடைய 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மொத்தத்தில் பீஜிங் நகரம், போர்க்கால நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன சுவாரசியம் என்றால் 2 மாத காலமாக பீஜிங்கில் எந்த தொற்றும் ஏற்படாமல் இருந்ததால் அங்கு தொற்று முடிவுக்கு வந்ததாகவே அதிகாரிகள் நினைத்து இருந்தனர். மேலும், அந்த நகரம் பாதுகாப்பானது என கணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜின்பிங் அரசு, தலைநகரில் 10 நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்கி நடத்தியது.

பொதுமக்கள் முக கவசங்களை விட்டு விடலாம் என கூறப்பட்டனர். ஆனால் இப்போது நிலைமை, வானிலை போல வேகமாக மாறி விட்டது. அங்குள்ள குடியிருப்புகள் 24 மணி நேரமும் அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. பீஜிங்கில் மட்டுமல்லாது பிற பிரதான பகுதிகளிலும் கொரோனா பரவத்தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது, சீனாவின் ஜின்பிங் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது…

கொரோனா வைரஸ் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியதை அடுத்து சீன அரசு பல்வேறு இடங்களில் 10 நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், பலருக்கு சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.