சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு… எதெற்கெல்லாம் அனுமதி… மற்றும் தடை…? விபரம்:-

Read Time:6 Minute, 19 Second

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு போராடிக் கொண்டு இருக்கிறது. என்னதான் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும் நோய் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான எண்ணிக்கையை சென்னை கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனாவல் ஏற்படும் உயிர்ப்பலியும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

கொரோனா வைரசிலிருந்து மக்களை காப்பாற்றும், முன்வரிசை பணியாளர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள், டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், போலீசார், தலைமைச்செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமி சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. அரசு பிறப்பித்த வழிகாட்டுதல்களை மக்கள் முறையாக பின்பற்றாததே நோய் தொற்று பரவ காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நோய் தொற்று அதிகம் உள்ள சென்னையில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பழனிசாமி அறிவித்து உள்ளார்.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் / சேவைகள் யாவை?

  • மருத்துவமனைகள், மருந்தகங்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
  • ஆம்புலன்ஸ்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். ஆட்டோக்கள், டாக்ஸிகள் மருத்துவ அவசரநிலைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • பொது சுகாதாரம், காவல்துறை போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மாநில அரசு துறைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மத்திய அரசு துறைகளும் 33% பணியாளர்களுடன் செயல்பட முடியும்.
  • பொது விநியோக கடைகள் (பி.டி.எஸ்) காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும்.
  • விநியோக சேவைகளை வழங்க ஹோட்டல்களுக்கும், உணவகங்களும் அனுமதி அளிக்கப்படுகிறது. அம்மா கேன்டீன்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கான சமூக சமையலறைகள் தொடர்ந்து செயல்படும்.
  • அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
  • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு உதவும் பிற நிறுவனங்கள் அனுமதியுடன் செயல்பட முடியும்.

என்ன நடவடிக்கைகள் / சேவைகள் தடைசெய்யப்பட்டு உள்ளன?

*பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது.


*மருத்துவ அவசரநிலையின்றி டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்கப்படாது.


*தேநீர் கடைகள் செயல்பட முடியாது


*கட்டுமான தளத்திற்குள் உள்ள தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்காத கட்டுமான நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் செயல்பட முடியாது.


மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மற்றும் நடமாடும் விற்பனையகம் காலை 6:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை திறந்திருக்கும். மக்கள் தங்கள் வீட்டிலிருந்து உள்ளூர் சந்தைக்கு 2 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.