“நிபோடிசத்திற்கு மத்தியில் இந்தி சினிமாவில் தனக்கொரு உலகை உருவாக்க முயன்றவர்…” இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை..

Read Time:7 Minute, 39 Second

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 1986-ம் ஆண்டு பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். 18 வயதில் எஞ்ஜினியரிங் படிப்பை பாதியில் விட்டுவிட்டு டிவியில் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். 2010-ல் நடன நிகழ்ச்சியில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தினார். இதனையடுத்து 22-வது வயதில் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார். ‘பவித்ர ரிஸ்தா’ ஜீடி.வி. தொடரில் மானவ் தேஷ்முக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

‘ஹை போ சே’ என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார். தொடர்களில் நடித்து வெள்ளித்திரையில் வெற்றியை நிலைநாட்டிய சில நடிகர்கள் பட்டியலில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் அடித்தது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு(எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி) படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் அறியப்படும் நடிகராக உருவாகினார். இந்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. கடைசியாக இவர் நடித்து வெளியான ‘சிச்சோர்’ என்ற படமும் மெகாஹிட் ஆகி இருந்தது.

சாதாரண குடும்பம் ஒன்றிலிருந்து இந்தி சினிமாவிற்குள் நுழைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

“ஒரு ரோல் எனக்கு கிடைக்க இருக்கும் சமயம், வேறு யாராவது அதைத் தட்டிப் பறித்துவிடும் சம்பவங்கள் நடந்துள்ளது. பிரபலங்கள் ஃபோன் செய்து அவர்களின் மகள் அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களுக்காக அந்த வாய்ப்பை வாங்கி விடுவார்கள். இல்லாவிட்டால் காதலிக்கு அல்லது தன் பெண் நண்பருக்காக எனக்கு வந்த வாய்ப்பு பறி போய் இருக்கிறது. நிபோடிஸம், காஸ்டிங் க்ரெளச் இதெல்லாம் அன்று முதல் இன்று வரை திரை உலகில் இருந்து வருகிறது” இது கடந்த ஆண்டு பிரபல நடிகை இஷா கோபிகர், பிங்க்வாலா யூட்யூப் சானலுக்கு பேட்டியளித்து பேசிய போது கூறியது. இது இஷா கோபிகருக்கு மட்டுமல்ல, வெள்ளித்திரையில் சாதிக்க வேண்டும் என காலடி எடுத்துவைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் விழும் மரண அடியாகும்.

பெரும் சவால்கள் அனைத்தையும் மறைமுகமாக சமாளித்துதான் பிரபலங்கள் பட்டியலுக்கு உயர்ந்துள்ளார்.. அவருடைய படங்கள் எல்லாம் தாயரிப்பாளர்களுக்கு நல்ல வருவாயையே கொடுத்து உள்ளது.

2015-ல் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த திரைப்படம் Detective Byomkesh Bakshy… இப்படத்தை இயக்கிய திபாகர் பானர்ஜி சுஷாந்தை வெகுவாக பாராட்டி உள்ளார். அவர் பேசுகையில் “இந்தி திரையுலகில் நிபோடிசத்திற்கு (துறையில் இருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்காக பிறருக்கான வாய்ப்பை தட்டி பறித்தல்) மத்தியில் தனக்கென ஒரு உலகினை கட்டமைக்க சுஷாந்த் சிங் முயற்சியை மேற்கொண்டார்,” எனக் கூறியுள்ளார்.

மற்றவர்கள் அவரை முரட்டுத்தனமாக நிகாரித்ததே, என்னை அவரை என்னுடைய படத்தில் இணைக்க முக்கிய மற்றும் முதல் காரணமாக அமைந்தது எனவும் குறிப்பிடுகிறார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34). இவர் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வந்தார். இவர் அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை அவரது உதவியாளர்கள் பார்த்து உள்ளனர் இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய நடிகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் மனோஜ் சர்மா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் தற்கொலை கடிதம் எதுவும் அவரது வீட்டில் இருந்து சிக்கவில்லை எனவும், இது குறித்து விசாரணை நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இளம் நடிகரான சுஷாந்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தற்கொலைக்கு நிதி நெருக்கடி காரணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தி திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிறந்த இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் நம்மிடம் இருந்து குறுகிய காலத்தில் பிரிந்து சென்று விட்டார். அவர் டி.வி. மற்றும் திரைப்படங்களில் திறமையாக நடித்து வந்தார். பொழுதுபோக்கு துறையில் அவரின் வளர்ச்சி பலருக்கு உத்வேகமாக இருந்தது. அவரின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினர், ரசிகர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதைப்போல திரையுலகினர், அரசியல்-விளையாட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘பல இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வெள்ளித்திரையில் பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என குறிப்பிட்டு உள்ளார்.

வானில் வட்டமிடும் கழுகினை தன்னுடைய பலம் கொண்டு விரட்டும் ஒரு கரிச்சான் குருவியாக உயரே பறந்த சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியவரவில்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்பதே அனைவருடைய பிரார்த்தனையாக இருக்கிறது.