இந்தியா-சீனா எல்லையில் மோதல்: 45 ஆண்டுகளுக்குப்பின் நடந்த முதல் உயிரிழப்பு..!

Read Time:1 Minute, 47 Second

இந்தியா – சீனா எல்லையில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது நேற்று திங்கள்கிழமை இரவு சீன ராணுவம் அத்துமீறிய போது இந்திய-சீனப் வீரர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் வீரமரணமடைந்துள்ளனர்.

இந்த மோதலில் சீன தரப்பில் பலியானோா் மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை 43 என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினா் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிகழ்ந்து வந்தாலும் மோதலில் உயிரிழப்பு ஏற்படுவது 45 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக கடந்த 1975-ம் ஆண்டு அருணாசல பிரதேசத்தின் துலுங் லா பகுதியில் நடந்த மோதலில் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு இருந்தனர்.

அதன் பிறகு இரு தரப்பினரும் பலமுறை மோதல், கைகலப்பில் ஈடுபட்டு இருந்தாலும் உயிரிழப்புகள் நிகழவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த டோக்லாம் மோதலில் கூட உயிரிழப்புகள் நிகழவில்லை.

ஆனால் தற்போது லடாக்கில் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதன் மூலம் 45 ஆண்டுகளுக்குப்பின் இருநாட்டு ராணுவத்தினா் இடையே மோதலில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.