கல்வான் பள்ளத்தாக்கில் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம், பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல்…

Read Time:5 Minute, 26 Second

கடந்த மாத தொடக்கத்தில் லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் சட்ட விரோதமாக ஊடுருவினர். நடந்த இந்த ஊடுருவலை கண்டறிந்த இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரை திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். மேலும் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் ஓல்டி போன்ற பகுதிகளிலும் இரு நாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதும் சூழல் உருவானது. அப்பகுதியில் சீனா ஆயுதங்களுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்தது.

இதனால் இந்தியாவும் கூடுதல் படைகளை லடாக்கில் களமிறக்கியது. மேலும் உத்தரகாண்ட், அருணாசல பிரதேசம், சிக்கிம் என இந்தியா-சீனா எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தன. இதனால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தீவிரம் காட்டின. அதன்படி ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், மேஜர்கள் மட்டத்திலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே இரு தரப்பிலும் ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் இரு நாடுகளும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள சம்மதித்தன. இதை அறிவித்த ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கல்வான் பள்ளத்தாக்குக்கு வடக்கில் இருந்து இந்திய படைகளை விலக்கி வருவதாக தெரிவித்தார்.

இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு (திங்கள்கிழமை ஜூன் 15) இரு நாட்டு வீரர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சீன வீரர்கள் இந்திய படையினர் மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

நேற்று காலைவரை பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில் இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி (கர்னல்) ஒருவரும், 2 வீரர்களும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியது. வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 40) என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சீனா தரப்பிலும் உயிர்பலி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டது.

இரவில் இந்த மோதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 20 பேர் பலியாகி விட்டதாக தெரியவந்தது. கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி வெப்ப நிலையில் நடந்த இந்த இருதரப்பு மோதலில் பலத்த காயமடைந்த மேலும் 17 வீரர்கள் பலியாகி விட்டனர் என தெரியவந்துள்ளது. இந்த மோதலில் சீனா தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பலத்த மோதல் நடந்திருப்பதும், அங்கு நிலைமை மோசமாக இருப்பதும் தெரியவந்து உள்ளது.

லடாக் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டு, பதற்றம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதல், அங்கு மேலும் பதற்றத்தை மிகவும் அதிகரித்து உள்ளது. எனவே அங்கு மீண்டும் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்காக முப்படை தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோருடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அவசர ஆலோசனையை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொண்டார். லடாக் எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் இந்தியா தரப்பில் உயிர்ப்பலிகள் நிகழ்வது வாடிக்கையாகி வந்த நிலையில், சீனாவின் அத்துமீறலாலும் இந்திய வீரர்கள் பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.