இந்தியாவில் 24 மணி நேரங்களில் 2003 உயிரிழப்புக்கள்… கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உச்சம் தொட காரணம் என்ன…?

Read Time:3 Minute, 54 Second

கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி, உயிரையும் குடித்து இருக்கிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி வருகிறது.

இந்தியாவில் வைரசின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அதனுடைய ஆட்டம் கட்டுப்பட்டதாக தெரியவரவில்லை.

மத்திய அரசு தினந்தோறும் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரங்களில் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளான 10,974 பேருடன் சேர்த்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 65 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 155,227 இருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணம் அடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் 2003 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் அதிகமாக இறப்பு பதிவானதற்கு காரணம் கடந்த சில வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதுதான் என தெரிவிக்கப்படுகிறது. மராட்டியம் மற்றும் டெல்லியில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அரசு பதிவில் இணைக்கப்படவில்லை. தற்போது அம்மாநிலங்கள் இறப்பை பதிவு செய்து உள்ளன.

இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் தொடர்ந்து இருக்கிறது. மராட்டியத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பான ஆவணங்களை அம்மாநில அரசு திருத்தம் செய்து உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,328 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 862 உயிரிழப்புக்கள் மும்பையில் கூடுதலாக பதிவானவையாகும். அம்மாநிலத்தில் இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,537 ஆக உயர்ந்து உள்ளது. மொத்த பாதிப்பு 113,445 ஆக உள்ளது.

இதே போல், டெல்லியின் கொரோனா வைரஸ் மரணம் 1,837 ஆக அதிகரித்துள்ளது. முந்தைய தகவல்களில் கணக்கிடப்படாத 344 இறப்புகளை மாநில சுகாதாரத் துறை பதிவு செய்து உள்ளது. புதிய இறப்புகளிலும் அங்கு அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் உயிரிழந்தனர். 1,859 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளுடன், டெல்லியின் கோவிட் -19 கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 45,000-ஐ நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் சென்னையை சேர்ந்த 22 வயது இளம்பெண் 49 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் உயிரிழப்பு 528 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டி உள்ளது.