இந்தியா இதுவரை காணாத ஒருநாள் கொரோனா பாதிப்பு… சாவு எண்ணிக்கை 12,237 ஆக அதிகரிப்பு..!

Read Time:3 Minute, 12 Second

இந்தியாவில் கொரோனா வைரசால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.

ஆரம்பம் முதலே பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு எண்ணிக்கை இந்தியாவில் குறைவாகவே இருந்து வந்தது. கடந்த 6 தினங்களாக இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 300 முதல் 400-க்குள் இருந்தது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 2,003 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா பாதிப்பில் முதல் மற்றும் 3-வது இடங்களில் உள்ள மராட்டியம் மற்றும் டெல்லியில் கடந்த நாட்களில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களில் பலருடைய விவரங்கள் சில காரணங்களால் மாநில புள்ளிவிவர பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டு இருந்ததாகவும், அதனை நேற்றைய பாதிப்புடன் சேர்த்ததால்தான் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் உயிரிழப்பு எண்ணிக்கை இவ்வளவு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் இந்தியா இதுவரை காணாத வகையில் கடந்த 24 மணி நேரங்களில் ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பில் உச்சம் கண்டுள்ளது. அதாவது 12,881 பேருக்கு புதியதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 366,946 ஆக அதிகரித்து உள்ளது. 24 மணி நேரங்களில் 334 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12,237 ஆக உயர்ந்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் 1,60,384 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,94,324 பேர் குணம் அடைந்து உள்ளனர். மராட்டியம், தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் அதிகமான பாதிப்பை கொண்ட் மாநிலங்களாக உள்ளன. தமிழகத்தில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 48 பேர் பலியாகினர்.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.