லடாக் எல்லையில் நடந்த மோதலில் வீரர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கும் சீனா திடீர் சமாதானத்துக்கு அழைப்பு …

Read Time:3 Minute, 34 Second

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த மாதம் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அங்கு ஓரளவு நிலைமை சீரடைய தொடங்கியது. இரு தரப்பிலும் படைகளை குறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

இந்த நிலையில் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே திடீரென்று பயங்கர மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய வீரர்களும் திருப்பி தாக்கினார்கள். இதில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி (கர்னல்) உள்பட 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இச்சம்பவத்தினால் லடாக் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்து உள்ளது. சீனாவின் அடாவடித்தனத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இதுபற்றி சீனா அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் அறிவிக்கவில்லை, மவுனம் காக்கிறது.

தங்கள் நாட்டு ராணுவவீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை சீனா தொடர்ந்து மறைத்து வருகிறது. மேலும், அந்நாட்டு அரசு ஊடகங்கள் உட்பட எந்தவொரு பத்திரிகைகளிலும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்தியாவை ஒப்பிடும்போது, சீனத் தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகம் என்பதாலேயே அதனை வெளியிட சீன அரசு தயங்குவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சீனா வீரர்கள் தரப்பில் அதிகமான உயிரிழப்பு உள்ளது என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது.

எல்லையில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் உருவாகி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜா லிஜியான் செய்தியாளர்ளிடம் பேசுகையில், லடாக் எல்லையில் சீனாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதுவே, இந்த மோதலுக்கு மூலக்காரணமாக அமைந்திருக்கிறது.

சீன எல்லையில் அத்துமீறுவதில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். ஒருதலைபட்சமாக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையால் இரு நாட்டு எல்லை விவகாரம் மேலும் பிரச்சினையாகிவிடும். இந்தியாவுடனான எல்லையில் இனியும் மோதல் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.