ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் ஆனது இந்தியா..! உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி!

Read Time:2 Minute, 58 Second

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இதில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்திய நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்த போதிலும் பாகிஸ்தான், சீனா, துருக்கி போன்ற சில நாடுகள் முட்டுக்கட்டையால் நிரந்தர உறுப்பினர் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது.

ஐ.நா.பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகளாகும் தற்காலிக உறுப்பினர்களை 2 ஆண்டுகாலத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கிறது. தற்போது தற்காலிக உறுப்பினர்களாக இருக்கும் பெல்ஜியம், டொமினிகன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் 2 ஆண்டு பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 5 தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஐ.நா. பொதுச்சபை அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் சார்பில் இந்தியா போட்டியிட்டது.

192 ஓட்டுகளில் இந்தியா 184 ஓட்டுகளை பெற்று அமோக வெற்றி பெற்றது. இந்தியா தேர்வு செய்யப்பட்டதை ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே அறிவித்தார்.

வருகிற 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கி 2 ஆண்டுகள் இந்த பதவியில் இந்தியா இருக்கும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆவது இது 8-வது தடவை ஆகும். மீதம் உள்ள 4 இடங்களில் 3 இடங்களுக்கு அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகள் தேர்ந்து எடுக்கப்பட்டன.

சர்வதேச சமுதாயத்துக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில், ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக தேர்வாகியிருப்பதற்கு உலகளாவிய சமூகம் காட்டியுள்ள பெரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி எனவும் உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இந்தியா இணைந்து செயல்படும் என பதிவிட்டுள்ளார்.