தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் தினமும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 18) ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்து உள்ளனர். புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்து இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை ஜூன் 18-ல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதியதாக 2 ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக 2 ஆயிரத்து 141 பேர் புதிதாக கொரோனாவில் சிக்கி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வந்த 13 பேரும், என மொத்தம் 49 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 625 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் 34 வயது வாலிபர் உட்பட 40 பேர் நேற்று உயிரிழந்து உள்ளனர்.
- இதனால் சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை எண்ணிக்கை 501 ஆக அதிகரித்து இருக்கிறது.
செங்கல்பட்டியில் 5 பேரும், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலையை சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்து உள்ளனர்.
தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,017 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 641 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மேலும், தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 23 ஆயிரத்து 65 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. அதிகப்பட்சமாக சென்னையில் 1,373 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.