‘எல்லாவற்றையும் உங்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ளுங்கள்’ சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

Read Time:3 Minute, 5 Second

லடாக்கின் கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன.

இதைப்போல தூதரக ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் எல்லை நிர்வாகத்தில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ளுமாறு சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா ஆன்-லைன் வாயிலாக செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் தங்கள் தூதரகங்கள், வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் ராணுவ மட்டத்தில் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் செயல்பாட்டு வழிமுறை மட்டத்திலான கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனையும் நடக்கிறது. எல்லை நிர்வாகத்தில் பொறுப்பான அணுகுமுறையை பொறுத்தவரையில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் எங்கள் எல்லைக்குள்ளேயே வைத்துக்கொள்வது என்பதில் இந்தியா மிகவும் தெளிவாக இருக்கிறது.

இதைப்போல சீனாவும் அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எல்லையில் அமைதியையும், நிலைத்தன்மையையும் பேணுவதன் அவசியம் மற்றும் வேறுபாடுகள் அனைத்தையும் பேச்சுவார்த்தைகள் மூலம் களைவதை நாங்கள் ஸ்திரமாக நம்புகிறோம். அதேநேரம், பிரதமர் மோடி கூறியது போன்று இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிசெய்வதில் நாங்கள் மிகுந்த உறுதியாக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் சிலர் மாயமாகி விட்டதாக வெளியான தகவல்களை மறுத்துவிட்டார். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார். இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என்று ராணுவமும் உறுதிபடுத்தியது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.