சீன நிறுவனத்துக்கு அளித்த ரூ.471 கோடி ஒப்பந்தம் ரத்து – ரெயில்வே முடிவு

Read Time:2 Minute, 53 Second

உத்தரப் பிரதேசம் கான்பூர்-முகல்சாரி இடையே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புப் பணிக்காக ரூ.471 கோடி மதிப்பில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ரெயில்வே துறை முடிவு செய்திருக்கிறது.

சிக்னல் அமைப்பதில் தாமதம், தொலைத்தொடர்புப் பணியை மிகவும் மெதுவாகப் பார்ப்பது மற்றும் வேலையில் எதிர்பார்த்த வேகம் இல்லை போன்ற காரணங்களால் சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் இதுவரை 20 சதவீதப் பணிகள் மட்டுமே நடந்து உள்ளது. ஆனால், 2019-ம் ஆண்டே பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது தாமதமான பணி காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட உள்ளது. எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று ரெயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார் என செய்தி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரிலிருந்து முகல்சாரி ரயில்வே நிலையம் வரை 417 கி.மீ. தொலைவுக்கு சரக்குப் போக்குவரத்துக்காக தனியாக ரெயில் பாதை அமைக்க ரெயில்வே திட்டமிட்டது. இந்த திட்டத்தில் ரெயில்வே சிக்னல், தொலைத்தொடர்பு தடம் அமைக்க பெய்ஜிங் தேசிய ரெயில்வே ஆய்வு மற்றும் சிக்னல் வடிவமைப்பு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.471 கோடியாகும். உலக வங்கியின் உதவியுடன் நடக்கும் இந்த திட்டத்தில் திடீரென சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தால் உலக வங்கி ஏற்காது. அப்படி உலக வங்கி ஏற்காதபட்சத்தில், செலவை ரெயில்வே துறையே ஏற்கவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

“சீன நிறுவனத்தின் மெத்தனமான பணியால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும என்பது ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுதான். தற்போது எல்லையில் நிலவும் சூழலுக்கும் இதற்கும் தொடர்பும் இல்லை” என அதிகாரியொருவர் தெரிவித்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.