ரஷியாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது…!

Read Time:2 Minute, 39 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 456,286 ஆக உள்ளது. நிலைமை மோசமாவதற்கு மத்தியில் எப்படியாவது தடுப்பூசியை கண்டுபிடித்துவிட வேண்டும் என ஆய்வாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.

இதுவரையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் சோதனை மட்டத்தில்தான் இருக்கிறது. பக்க விளைவுகள் இல்லையென தெளிவான பின்னரே மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

இந்நிலையில் ரஷிய நாட்டில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டு உள்ளது. இந்த ஊசி போடப்பட்டதில், அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவு ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 18 பேருக்கு செலுத்தி பரிசோதித்து இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே இலையுதிர் காலத்தில் கொரோனா 2-வது அலைக்கு சாத்தியம் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் குளூக் பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்று குறையத்தொடங்கி உள்ள நாடுகளில், கோடையில் இது நீடிக்கும். ஆனால் இலையுதிர் காலம் தொடங்கும்போது 2-வது அலையை எதிர்பார்க்கிறோம். இன்புளூவன்சா காய்ச்சலும் வரும். இருப்பினும் இது குறித்து உறுதியாக தெரியவில்லை எனக் தெரிவித்து உள்ளார்.