ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பாடம்.. – பிரதமர் மோடி!

Read Time:4 Minute, 39 Second

கடந்த 15-ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கற்களாலும், இரும்பு கம்பிகளாலும் தாக்கிக் கொண்டதில், இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் பலி ஆனார்கள். ஆனால், சீனா உண்மையை தெரிவிக்காமல் மவுனம் காக்கிறது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேசியதை தொடர்ந்து தற்போது அங்கு பதற்றம் சற்று தணிந்து உள்ளது. தாங்கள் சிறை பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்தது. லடாக் மோதல் சம்பவத்துக்கு மோடி அரசே பொறுப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்த மோதல் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பதாகவும், அவர் நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி களநிலவரம் பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து மத்திய அரசு அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியது. பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், சீனாவுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கூட்டத்தில், எல்லை பிரச்சினை தொடர்பாக கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை பிரதமர் மோடி கேட்டார். இதனையடுத்து அவர் பேசுகையில், லடாக்கில் நடந்த மோதலின் போது இந்திய எல்லைக்குள் சீன படைகள் எந்த நிலைகளையும் பிடிக்கவில்லை. ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர். அப்போது நடந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

நமது எல்லைகளை பாதுகாக்க கடந்த சில ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட உள்கட்டமைப்பால் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் திறன் அதிகரித்திருக்கிறது. இந்திய விமானப்படையின் வானதாக்குதல் திறன் அதிகரித்து இருக்கிறது. நமது பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், போர் விமானங்கள், நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குதற்கும் அதி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முன்பு கண்காணிக்கப்படாமல் இருந்த பகுதிகளைகூட இப்போது நமது பாதுகாப்பு படைகள் கண்காணித்து வருகின்றன. நமது முப்படைகளும் வலுவாக உள்ளன. நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் நமது பாதுகாப்பு படைகள் ஈடுபடுகின்றன. நாட்டின் ஒரு அங்குல நிலத்தில் கூட யாரும் கண் வைக்காத அளவுக்கு நமது படைத்திறன் வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளார்.