லடாக் எல்லையில் விமானப்படை தளபதி ஆய்வு; “கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்கள் தியாகம் வீணாகப் போகாது” என உறுதி!

Read Time:2 Minute, 16 Second

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ம் தேதி இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனால் எல்லையில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே, எல்லையில் எந்தவித அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சீனாவுடனான எல்லைப்பகுதிகளை விழிப்புடன் கண்காணிக்க முன்வரிசை விமானப்படை தளங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், எல்லை பகுதியில் போர் விமானங்கள் தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா நேற்று (ஜூன் 19) லடாக் பிராந்தியத்திலுள்ள லே நகர் மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்று விமானப்படையின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளார். நேற்று மதியம் லே நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அங்கு அவர் பல்வேறு மூத்த விமான படை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.

பின்னர் ஐதராபாத் விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு விழாவில் இந்திய விமானப்படை தலைவர் ஆர்.கே.எஸ்.பதவுரியா பேசுகையில், “அமைதியை உறுதி செய்வதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், எந்த ஒரு அத்துமீறல் சம்பவத்திற்கும் பதிலடிகொடுக்க தயார் நிலையில் இருக்கிறோம். கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்கள் தியாகத்தை வீணாக செல்ல விடமாட்டோம். எல்லையில் படைகள் தீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது” எனக் கூறியிருக்கிறார்.