கொரோனாவுக்கு ‘ஃபேவிபிரவிர்’ மருந்து அறிமுகம்..! இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம்(DCGI) அனுமதி!

Read Time:2 Minute, 30 Second

உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ்’ நிறுவனம் கொரோனா தடுப்பு மாத்திரை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஆரம்பம் மற்றும் அதற்கு அடுத்தக்கட்ட கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு ‘ஃபேவிபிரவிர்’ என்ற இந்த மாத்திரைகள் ‘ஃபேபிப்ளூ’ என்ற பிராண்ட் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு இந்த மாத்திரைகள் சிறந்த பலனளிக்கும், அதாவது வைரசின் வீரியத்தை மேலும் அதிகரிக்காமல் தடுக்கிறது என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதில் ஒரு மாத்திரையின் விலை ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குனரகம் (DCGI) இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் இதய நோயாளிகளுக்கு இந்த மருந்து பலன் தந்துள்ளது அதாவது நான்கே நாட்களில் வைரஸ் தீவிரம் குறைந்துள்ளதாக என கிளென்மார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல் நாளன்று 1800 எம்ஜி திறன் கொண்ட மாத்திரைகள் இரண்டு வேளையும், அதன்பின் இரண்டாவது நாளிலிருந்து 14 நாட்களுக்கு 800எம்ஜி மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஃபேபிப்ளூ மாத்திரைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விரிவாக கருத்து கூற மறுத்துள்ளனர். எனினும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்த இது உதவும் எனவும், இதன் பலன்களை வரும் நாட்களில் தான் கண்டறிய முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.