சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழ்நிலையில், பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு கல்லூரி விடுதிகள், அறைகள் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்படுகின்றன.
ஏற்கனவே சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருபகுதி தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கு மேலும் கூடுதலாக இடம் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சி மாணவர்களின் விடுதிகளை ஒப்படைக்க மாநகராட்சி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் கேட்டது. ஆனால் மாணவர்கள் ஊரில் இல்லாத காரணத்தால் விடுதியை தர இயலாது அதற்கு பதிலாக ஆடிட்டோரியத்தை ஒப்படைப்பதாக பல்கலைக்கழகம் கூறியது.
இருப்பினும் மாநகராட்சி தொடர்ந்து விடுதியை கேட்டு வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மாநகராட்சிக்கு சில பரிந்துரைகளின் அடிப்படையில் விடுதியை ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதித்து இருக்கிறது.
அதில், ‘மாணவர் விடுதியில் உள்ள பொருட்களை மாணவர்களோ அல்லது அவர்களின் பாதுகாவலர்களோ வந்து எடுப்பதற்கும், மீண்டும் அவர்கள் பாதுகாப்பாக தங்களுடைய வீடுகளுக்கு திரும்புவதற்கும் உரிய ஏற்பாடுகளை, மாநகராட்சி செய்து தரவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா சிகிச்சை முகாமாக அண்ணா பல்கலைக்கழக கட்டிடங்களை பயன்படுத்திய பிறகு, எதிர்கால பயன்பாட்டுக்கு முறையாக சுத்தப்படுத்தி மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என்றும் மாநகராட்சியிடம் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.