கொரோனா சிகிச்சைக்கு ‘ஃபாபிப்ளூ’… ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் மிகுந்த பலன் அளிக்காது இந்திய மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி விளக்கம்…

Read Time:3 Minute, 34 Second

2020-ம் ஆண்டில் மக்கள் அதிகம் உச்சரித்ததும், மக்களை அதிகம் அச்சுறுத்தியதும் ‘கொரோனா’ வைரஸ் ஆகும். சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த ஆட்கொல்லி வைரஸ் உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் பயத்துடன் நாட்களை கடத்தும் சூழல் நிலவுகிறது.

மனித சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்துகளோ, தடுப்பூசியோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் தடுப்பு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்வாடப்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஃபாபிப்ளூ பிராண்ட் பெயரில் விற்கப்படும் ‘ஃபாவிபிரவிர்’ மாத்திரைகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் என மும்பையை சேர்ந்த கிளென்மார்க் மருந்து நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 எனவும் நிர்ணயம் செய்தது.

இதைப்போல சிப்லா, ஹெடேரோ நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா வைரசுக்கு பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை பெற்று உள்ளன. இந்த மருந்தின் (ஊசி மருந்து) ஒரு டோஸ் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மருந்துகள் கொரோனாவை தடுக்கும் என இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவி வரும் நிலையில், மேற்படி மருந்துகள் கொரோனாவுக்கு மிகுந்த பலன் அளிக்காது என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து உள்ளது சற்று அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் விளக்கம் அளிக்கையில், கொரோனா வைரசுக்கு எதிராக எந்த ஒரு மருந்தும் வலிமையாக செயல்பட்டதாக இந்த நாள் வரை ஆதாரம் கிடையாது. எனவே, அதுவரை எந்த மருந்தையும் ஆட்டத்தை மாற்றும் திறன் பெற்றதாக எங்களால் கூற முடியாது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருந்துகளின் பலன்களை எதிர்காலத்தில்தான் அறிய முடியும். எனினும் ,கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த மருந்துகள் உதவி புரிகின்றனவா…? என்பதும் இன்னும் கண்டறியப்படவில்லை’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

டெல்லி தனியார் மருத்துவமனை டாக்டர் விகாஸ் மவுரியாவும் ‘ஃபாபிப்ளூ, ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் வேறு சில நோய்களுக்கு பயன்படுத்தக்கூடியவை. எனினும் இந்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒருசில வழிகளில் உதவி புரியும். அதனால் இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்கள் அனைவரும் குணமடைவார்கள் என கூற முடியாது’ என்று தெரிவித்து உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.