மதுரையில் ஒரு வாரம் முழு ஊரடங்கு, எதற்கெல்லாம் அனுமதி…? விபரம்:-

Read Time:5 Minute, 32 Second

மதுரையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே நோய் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் ஒரு வாரம், மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மதுரையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 • மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு அனுமதி தொடரும்.
 • ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் அவை மருத்துவ அவசரத்துக்கு தேவைப்பட்டால் மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
 • ரெயில்வே நிலையம், விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்ல பிரிபெய்ட் ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனம் அனுமதி வழங்கப்படும். இதற்கு இ-பாஸ் மட்டும் போதும்.
 • அங்குள்ள மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அலுவலகங்கள் தேவையான அளவு ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
 • 29, 30-ம் தேதிகளில் வங்கிகள் 33 சதவீதத்துக்கு உட்பட்ட ஊழியர்களுடன் இயங்கும். ஏ.டி.எம். போன்ற வங்கி சேவைகள், வங்கி தொடர்பான போக்குவரத்து எப்போதும் போல் தொடரும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் இயங்க வேண்டும்.
 • 24-ம் தேதி முதல் 26-ம் தேதிகளில் வங்கி கிளைகள் குறைந்த அளவு ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இயங்கும். பெட்ரோலிய பொருட்கள், எல்.பி.ஜி. ஆகிய டீலர்கள், வினியோகம் செய்பவர்களின் பணப் பரிமாற்றம் மட்டும் நடத்தப்பட வேண்டும்.
 • பொதுமக்களுக்கு வங்கியில் நேரடி சேவை இருக்காது.
 • பொதுவினியோக கடைகள் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை செயல்படும்.
 • இந்திய உணவுக் கழகம், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகம் ஆகியவற்றுக்கான போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுவினியோகக் கடைகள் இயங்காது. அங்குள்ள ஊழியர்கள், அரசு அறிவித்த நிவாரணத்தை அங்குள்ள குடும்பங்களுக்கு நேரடியாக சென்று வழங்க வேண்டும்.
 • காய்கறிக் கடைகள், பலசரக்குக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. நடமாடும் பழக்கடை, காய்கறிக்கடைகளும் அந்த நேரத்தில் அனுமதிக்கப்படும்.
 • ஓட்டல்களில் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை உணவுகளை பார்சலாக வாங்க அனுமதியளிக்கப்படுகிறது. ஓட்டல்களில் போன் மூலம் ஆர்டர் செய்து உணவு வாங்கலாம்.
 • முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் இயங்கலாம். முதியோருக்கு வீடுகளுக்கு சென்று சேவை அளிக்கலாம். அம்மா உணவகங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் சமூக சமையல் கூடங்கள் தொடர்ந்து இயங்கும்.
 • அச்சு ஊடகம், காட்சி ஊடகங்கள், நீதிமன்றங்களின் பணிகளுக்கு தடை கிடையாது. குறைந்த தொழிலாளர்களுடன் கட்டுமானங்கள் அனுமதிக்கப்படும்.
 • தொழிற்சாலைகளுக்குள் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு பகுதிக்குள் தொழிலாளர்கள் தினமும் சென்றுவர அனுமதி கிடையாது. முழு ஊரடங்கு காலத்தில் இ-பாஸ்கள் செல்லும். அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும்.
 • பால், குடிநீர், வினியோகம் மற்றும் அவசிய தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
 • மருத்துவம், இறுதி சடங்கு, திருமணம் போன்றவற்றுக்காக வெளி மாவட்டம் செல்வோர் மட்டும் தகுந்த ஆவணங்களை காட்டினால் அனுமதி உண்டு.
 • தொலை தொடர்பு, ஐ.டி. சேவைகள் ஆகியவை குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம்.
 • 27-ந் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து 29-ம் தேதி காலை 6 மணிவரை (28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழுவதும்) எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பால் வினியோகம், மருத்துவமனை, அதற்கான வாகனங்கள், மருந்து கடை, மருத்துவ அவசரத்துக்கு தனியார் வாகனங்கள் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது.