பொறியாளருக்கு கொரோனா: நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மூடப்பட்டது!

Read Time:1 Minute, 33 Second

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயல்பட்டு வருகிறது. இங்கு இஸ்ரோவின் ராக்கெட்டை விண்ணில் செலுத்த உதவும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை மையம் உள்ளது. மகேந்திரகிரியில் பல்வேறு பிரிவுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பொறியாளராக பணியாற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 28 வயது நபருக்கு கடந்த 3 நாட்களாக  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 20-ந் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருடன் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று ஒரு நாள் மட்டும் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.