இங்கிலாந்து தொடருக்கு செல்ல இருந்த 10 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா..!

Read Time:3 Minute, 37 Second

இங்கிலாந்து தொடருக்கு செல்ல இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் தான் தொடங்குகிறது என்றாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்காக பாகிஸ்தான் வீரர்களும், மருத்துவ அதிகாரி உள்பட பயிற்சி குழுவினரும் வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து சிறப்பு விமானத்தில் லண்டனுக்கு புறப்படுவதாக இருந்தது.

இங்கிலாந்துக்கு தொடருக்கு கிளம்புவதற்கு முன்பாக தங்களது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. முதற்கட்டமாக அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

10 வீரர்களுக்கு பாதிப்பு

இதன் முடிவில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், புதுமுக பேட்ஸ்மேன் 19 வயதான ஹைதர் அலி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மற்றும் பஹார் ஜமான், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுப், காஷிப் பாட்டி, முகமது ஹஸ்னைன், இம்ரான் கான் ஆகிய 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அணியின் உதவியாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளார். சோதனைக்கு முன்பு வரை இவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததும் அவர்கள் அணியுடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கொரோனா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மேலும் 10 வீரர்கள் கொரோனாவில் சிக்கி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்பு இல்லாத மற்ற வீரர்கள் அனைவரும் இன்று லாகூரில் கூடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் உயரிய மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்து நாளை மறுபடியும் சோதனை நடத்தப்படும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி வாசிம்கான் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் திட்டமிட்டபடி தொடரும். டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் பிரதான வீரர்களில் அதிர்ஷ்டவசமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. அதனால் அவர்கள் அங்கு சென்றதும் உடனடியாக பயிற்சியை தொடங்க முடியும்’ என்றார்.