இந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி; 418 பேர் உயிரிழப்பு…

Read Time:2 Minute, 32 Second

இந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து செல்கிறது. இதுவரை இல்லாத அளவில் புதிதாக சுமார் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,73,105 ஆக உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், ஒரே நாளில் 16 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 894 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,71,697 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,86,514 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் 10 மாநிலங்களில் கொரோனா 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொரோனா வைரசின் பிடியில் ஆரம்பம் முதலே சிக்கி தவிக்கும் மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 1,42,900 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. அங்கு மட்டும் 6,739 பேர் உயிரிழந்து உள்ளன்ர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 67 ஆயிரத்து 468 ஆக உயர்ந்து இருக்கிறது. தேசிய தலைநகரான டெல்லியில் 70,390 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குஜராத்தில் பாதிப்பு 28,943 ஆக இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 19,557, ராஜஸ்தானில் 16,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.