மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது…

Read Time:2 Minute, 45 Second

தென் மாவட்டங்களில் அதிகமாக மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதன் எதிரொலியாக மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்றும் மதுரையில் 97 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து செல்கிறது. நேற்று புதியதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அரசு ஊழியர்களும் உள்ளனர்.

நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 97 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் தங்கியிருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 423 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 641 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் முதலிடத்தில் சென்னை மாவட்டம் இருக்கிறது. சென்னையில் 45 ஆயிரத்து 814 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. அங்கு 4,202 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் 2,907 பேரும், காஞ்சீபுரத்தில் 1,375 பேரும், மதுரையில் 1,073 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் மதுரையில் தான் முதல் முறையாக நோய்த்தொற்று ஆயிரத்தை கடந்து இருக்கிறது.