சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை… அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் அதிரடி கைது…

Read Time:3 Minute, 6 Second
Page Visited: 228
சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை… அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் அதிரடி கைது…

கொரோனா வைரஸ் தாக்குதலையொட்டி அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் செல்வதற்கு அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தால் மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு போன்ற சம்பவங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது.

இதனை அரசு அதிகாரிகள் துணையோடு போலியாக தயாரித்து ஒரு கும்பல் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக புகார்கள் தொடர்ந்தன. இதனையடுத்து‘இ-பாஸ்’ தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.

இந்தநிலையில் சென்னை அண்ணாசாலையை சேர்ந்த துரைராஜ் (வயது 29) என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த புகார் மனுவில், போலி ஆவணங்கள் மூலம் சிலர் இ-பாஸ் தயாரித்து பொதுமக்களுக்கு ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவின் ‘சைபர் க்ரைம்’ போலீசாருக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ‘சைபர் க்ரைம்’ போலீசார் ‘தொற்று நோய் தடுப்பு’ சட்டப்பிரிவு 269 மற்றும் ‘பேரிடர் மேலாண்மை’ சட்டப்பிரிவு உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். போலி இ-பாஸ் தயாரிப்பு வழக்கில் சென்னை பேசின்பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் கோபி (35), மனோஜ்(30), வினோத்(37) ஆகிய 5 பேரை நேற்று ( ஜூன் 24) கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

போலீஸ் விசாரணையில் இவர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %