ஆலங்குளத்தில் சப்-இன்ஸ்பெக்டர், எழுத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

Read Time:2 Minute, 41 Second

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், எழுத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். அவர்களை ஆலங்குளம் ஊரின் எல்லையில் போலீசார் உதவியுடன் சுகாதார துறையினர் தடுத்து நிறுத்தி தடுப்பு மையத்திற்கு அனுப்பி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஆலங்குளம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், எழுத்தர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு நேற்று முன்தினம் (ஜூன் 24) வந்தது. அதில், அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தொற்று உறுதியான 2 பேருடன் தொடர்புடைய 103 பேரை கண்டறிந்து அவர்களில் 17 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மற்றவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கண்காணிப்பில் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும் காவலர் குடியிருப்பில் உள்ள போலீசாரின் குடும்பங்களையும் சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டர், எழுத்தர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியேற நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.