மதுரையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊரடங்கு நிவாரணம் வழங்க ரூ.54 கோடி ஒதுக்கீடு! அரசு அரசாணை!

Read Time:1 Minute, 59 Second

மதுரையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் நகரிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பகுதியில் வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ஊரடங்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 24-ந் தேதி நடைபெற்ற அனைத்து மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.1,000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசுக்கு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம் எழுதி, மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 331 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளதாகவும், இவர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்குவதற்கு ரூ.53.93 கோடியை அனுமதித்து அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார். அவர் கேட்டுக்கொண்டபடி ரூ.53.93 கோடியை அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.