எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்…. பாதுகாப்பு படையின் கழுகு பார்வையில் டெல்லி பாகிஸ்தான் தூதரகம்…!

Read Time:3 Minute, 52 Second

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகள், இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இவ்விவகாரத்தில் கடந்த மே 31-ம் தேதி, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் கையும், களவுமாக பிடிபட்டு வெளியேற்றியது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை 7 நாட்களுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.

பதிலுக்கு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை இந்தியா பாதியாக குறைத்துக் கொள்ளும் என்று தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியேற்றம் விவகாரத்தில் முக்கியமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு முக்கிய காரணமாக, அந்நாட்டு அதிகாரிகள் காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கத்தில் இணையவும், பயிற்சிக்கும் அனுப்பியுள்ளனர் என இவ்விவகாரம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

2017 ஜனவரியில் இருந்து 399 காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தான் தூதரகம் மூலமாக வீசா பெற்றுள்ளனர். இவர்களில் 218 பேரின் இருப்பிடம் இதுவரையில் தெரியவில்லை என உளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏப்ரல் 5-ம் தேதியன்று எல்லையில் 5 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வேட்டையாடியது. அவர்கள், பாகிஸ்தானின் துத்னியால் பகுதியில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் கெரான் செக்டாருக்குள் ஊடுருவினர் அப்போது தீவிர கண்காணிப்பில் இருந்த பாதுகப்பு படையினர் அவர்களை சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் காஷ்மீரை சேர்ந்தவர்கள். அவர்கள் 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் தூதரகத்தால் வீசா வழங்கப்பட்டு பாகிஸ்தான் சென்றவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

2019 பிப்ரவரில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சிகளில் பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் மூலம் உள்ளூர் எதிர்ப்பாளர்களின் போராக பிரச்சினையை சித்தரித்து சர்வதேச அளவில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இதனையடுத்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை பாதுகாப்பு படையினர் அறிந்து உள்ளனர். இதுபோன்ற பல சம்பவங்கள் பாகிஸ்தான் தூதரகம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை வெளிக்காட்டியிருக்கிறது. இதனையடுத்து பாகிஸ்தான் தூதகரத்தின் நகர்வுகளை பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.