கொரோனா ஊரடங்கால் மனித நடமாட்டம் குறைவு; மலைப்பகுதியில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Read Time:4 Minute, 55 Second

இயற்கை எப்போதுமே நம்மை எளிதாக வசீகரித்து மயக்கி விடுகிறது. பசுமை போர்த்தி விரிந்த மலைகளுக்குள் நமக்கு எண்ணிலடங்கா வியப்புகள் காத்திருக்கின்றன. இயற்கை பசுமை, நீர்வீழ்ச்சி, விலங்குகள், தாவரங்கள் என எந்த அளவுக்கு பசுமையை காட்டி மயக்குகிறதோ, அந்த அளவுக்கு வெண்ணிற பனி முகடுகளாலும் நம்மை மயக்கும் வல்லமை கொண்டது. இந்த இயற்கைக்குள் வசிக்கும் உயிரினங்கள் பல போராட்டங்களை கடந்து தன்னுடைய வாழ்வியலை வடிவமைத்துக் கொள்கிறது. அப்படி வடிவமைத்து கொள்ள முடியாமல் அழிந்து போகும் உயிரினங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப்போதும் அழிவின் விளிம்பில் நின்று தத்தளித்துக்கொண்டிருக்கின்றன.

இப்படி அழிவின் பட்டியிலில் உள்ள விலங்கினங்களில் நீலகிரி வரையாடும் ஒன்று. ‘ஹெமிடிராகஸ் ஹைலோகிரையஸ்’ (Nilgiritragus hylocrius) என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த விலங்கினம் தமிழகத்தின் மாநில விலங்காகும். 12 வரையாடு இனங்களில் இந்த ஒரு இனம் மட்டுமே, தென்னிந்தியாவில் காணப்படுகிறது. இவ்வகையான ஆடுகள் உயர்ந்த மலைகளில் உள்ள செங்குத்தான பாறை முகடுகளில் வசிக்கும். கிட்டத்தட்ட 1200 மீட்டர் முதல் 4000 மீட்டர் வரை உள்ள இடங்களில் மட்டுமே இவை காணப்படுகிறது.

வரையாடுகள் தமிழக கேரள பகுதிகளில் மட்டுமே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள இரவிக்குளம் தேசியப் பூங்கா (கேரளா), ஆனைமலை (தமிழ்நாடு), நீலகிரி மலைகள், வால்பாறை பகுதிகளில் இவற்றை பார்க்க இயலும். ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு லட்சக்கணக்கில் இருந்த இவற்றின் எண்ணிக்கை அவர்கள் வேட்டையாடலில் எளிதில் சிக்கியது. பின்னர் அவற்றை வேட்டையாடுவது தொடர்ந்தது. இதனால் எண்ணிக்கை அருகியது. வேட்டையாடல், சுருங்கிய வசிப்பிடங்கள் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகிய காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவிட்டு, தற்போது அழிவின் விளம்பில் உள்ளன.

1972-ல் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், வரையாடுகளுக்கான அச்சுறுத்தல் ஓரளவு குறைந்து உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நீலகிரி மற்றும் ஆனைமலைகளில் மட்டுமே அதிக வரையாடுகள் காணப்படுகின்றன. பழநி, மேகமலை மற்றும் அகஸ்திய மலைகளில் குறைந்த எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன.

அழிவின் விளம்பில் உள்ள நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை முக்கூர்த்தி தேசிய பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது என கடந்த செப்டம்பரில் தெரிவிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் முக்குருத்தி தேசியப் பூங்கா நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வரையாடுகளின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து, இளம் வரையாடுகளை அதிகம் காணமுடிந்தது. அதிலும் பெண் வரையாடுகள் அதிகம் தென்பட்டன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கை மனித -மிருக மோதலை கட்டுப்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கினால் வரையாடுகளின் எண்ணிக்கையானது அதிகரித்து உள்ளது. மேலும் நற்செய்தியாக புதியதாக குட்டிகள் பிறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இரவிக்குளம் தேசியப் பூங்கா (கேரளா) தரப்பில் ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு 773 வரையாடுகள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதில் 155 புதியதாக பிறந்தவையாகும். 2019-ம் ஆண்டு அங்கு 526 ஆடுகளும், புதியதாக பிறந்த 91 குட்டிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், குட்டிகள் இறப்பும் கவலையை அளிப்பதாக உள்ளது. தமிழகப்பகுதிகளிலும் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.