கொரோனா தொற்று நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை…

Read Time:4 Minute, 26 Second

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் நெல்லையில் ‘இருட்டுக்கடை அல்வா’ அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி என்றால் நெல்லையப்பர் கோவிலுக்கு பிறகு அல்வா மிகவும் ‘பேமஸ்’. திருப்பதி லட்டு, மணப்பாறை முறுக்கு வரிசையில் அல்வாவுக்கு நெல்லை நகரம் பெயர் பெற்றது. தாமிரபரணி தண்ணீர் அல்வாவுக்கு சுவை கூட்டுவதாக சொல்லப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு புகழ் பெற்ற ‘இருட்டுக்கடை அல்வா’ கடை இருக்கிறது. நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருட்டுக்கடை அல்வாவின் சுவைக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதனால் மாலை நேரத்தில் கூட்டம் ஈயாக மொய்க்கும்.

பலர் இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள உறவினர்களுக்கு அல்வா வாங்கி அனுப்புவது வழக்கமாகும். இந்த கடையின் அதிபர் ஹரிசிங் (வயது 80). இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது வீடு நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக நெல்லையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு தினமும் ஏராளமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஹரிசிங்குக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 24) கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை அறிந்ததும் ஹரிசிங் அதிர்ச்சி அடைந்து உள்ளார். தனக்கு வயதாகி விட்டதால் கொரோனா தன்னை அதிக அளவு பாதிக்கும் என்றும், ஒருவேளை குணம் அடைந்தாலும், கடைக்கு சென்று வியாபாரம் செய்ய முடியாது என்றும் நினைத்து கலங்கியிருக்கிறார். இதனால் சோகமாக காணப்பட்ட ஹரிசிங் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வார்டில் உள்ள ஜன்னலில் திடீரென்று வேட்டியை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் ‘இருட்டுக்கடை அல்வா‘ கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட ஹரிசிங்கின் மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரும் நெல்லை டவுனில் இனிப்பு கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்துக்கொள்வது பரவலாக காணப்படுகிறது. தற்பாதுகாப்பை மீறி வைரஸ் தொற்று ஏற்பட்டால் தொற்றுடன் போராடி அதிலிருந்து மீண்டுவரவே முயற்சிக்க வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாக அமையாது. மருத்துவ உதவியுடன் 90 வயது முதியவர்களும் தொற்றிலிருந்து தப்பித்து உள்ளனர். பயம் காரணமாகவே அதிகமானோர் சக்தியை இழந்து உயிரை பறிகொடுக்கிறார்கள். எனவே, பயத்தை தவிர்த்து கொரோனாவை வெல்வோம்.