படைகளை குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பை அதிகரிக்கும் சீனா…! ஹெலிபேட் ஒன்றை கட்டமைக்கிறது…

Read Time:6 Minute, 0 Second

லடாக்கில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்திய-சீன எல்லைப் பகுதியில் நெருக்கடியான சூழ்நிலை உருவாகி உள்ளது. இருநாடுகளும் எல்லையில் பாதுகாப்பு படையின் கண்காணிப்பை அதிகரித்து உள்ளன. இராணுவ தளபதிகளிடையே இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படாத நிலையில், சீன ராணுவம் பாங்கோங் த்சோ பகுதியில் தனது நிலைகளை பலப்படுத்த தொடங்கி உள்ளது.

பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு கரையில் சீனா தனது படைகள் திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து ஃபிங்கர் 4 பகுதியில் ஹெலிபேட் ஒன்றை கட்டமைக்கும் பணியினை மேற்கொண்டு உள்ளது.

இது சீனர்கள் தங்களுடைய நிலையில் வலுவாக இருப்பதாகவும், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலையை சுயமாக அதாவது ஒருதலைபட்சமாக மாற்ற விரும்புவதையும் காட்டுகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரி ஒருவர் பேசுகையில், “சீனர்கள் பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக்கரையில் தங்கள் நிலைகளை பலப்படுத்த தொடங்கி உள்ளனர் என்பது சரியானது. ஃபிங்கர் 4 பகுதியில் இப்போது ஒரு ஹெலிபேட் கட்டப்பட்டு வருகிறது. இது, கடந்த எட்டு வாரங்களில் அல்லது அதற்கு கூடுதலான காலத்தில் அவர்களால் மற்ற அனைத்து உள்கட்டமைப்பு கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது ” என தெரிவித்து உள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

“சீனப்படைகளின் ரோந்துகள் இப்போது ஃபிங்கர் 3 பகுதி வரையிலும் நீள்கிறது. மேலும், ஃபிங்கர் 2 பகுதிக்கு திரும்பிச் செல்லுமாறு அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள், ” என்றும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

மற்றொரு அதிகாரி இதுதொடர்பாக விளக்கம் அளிக்கையில், “சீனர்கள் தங்கள் நிலைக்கு திரும்பிச் செல்லவோ அல்லது நிலைமையை மீட்டெடுக்கவோ விரும்பவில்லை என்று எங்களிடம் கூறுகிறார்கள். அதனால்தான், பாங்காங் த்சோவில் படைகள் நீக்கம் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ” எனக் கூறியிருக்கிறார்.

“ஃபிங்கர் 3 மலை உச்சி வழியாக பாங்கோங் த்சோ ஏரிக்கரை வரை சீனா ராணுவம் தனது ரோந்து பணியை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஃபிங்கர் 2 பகுதி வரை இந்தியா ராணுவத்தின் ரோந்து பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது, ” என்றும் அதிகாரி தெரிவித்து உள்ளனர்.

இந்திய ஃபிங்கர் 8 வரை தனது ரோந்து பணியை மேற்கொண்டனர் என்பது வரலாறாகும். எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி நெடுகிலும் இந்தியப் படைகள் போதுமான அளவு குவிக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள உள்ளூர் நிலப்பரப்பு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு சவாலான பகுதி என்பதை நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்,”என்று அதிகாரி குறிப்பிட்டு உள்ளார்.

பாங்கோங் த்சோவும் அதன் வடக்குக்கரையும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு மோதல் போக்குக்கான இடமாக இருக்கிறது. ஆனால் தற்போதைய பதட்டங்கள் எழுவதற்கு முன்பு சீனர்களுக்கு ஃபிங்கர் 8 பகுதியில் ஒரு நிரந்தர தளம் இருந்தது. ஆனால், தற்போது மேற்கில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபிங்கர் 4-ல் பதுங்கு குழிகள், கூடாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஃபிங்கர் (கை விரல்களை போல் தொடர்ச்சியான மலையும் பள்ளமும் காணப்படும் தோற்றம்) என்பது ஏரிக்கு வடக்குக்கரைப்பகுதியில் இருக்கும் மலைப்பாங்கான பகுதிகளை குறிக்கிறது.

இப்பகுதியில் இந்தியாவின் எல்லை கட்டுபாட்டுக் கோடு ஃபிங்கர் 8 வழியாக செல்வதாக இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. தற்போது, சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. ஃபிங்கர் 3 பகுதிக்கு அருகே இந்திய ராணுவத்துக்கான சொந்தமான முக்கிய தளம் அமைந்திருக்கிறது. அதாவது, தற்போதைய சீன படைக்குவிப்புக்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த தளம் உள்ளது. ஃபிங்கர் 4-ல் நிர்வாக தளத்தையும் இந்திய தரப்பு கொண்டுள்ளது. இந்த பகுதியில் தான் தற்போது இந்தியா ராணுவம் தன்னை நிலைநிறுத்தி கொண்டு உள்ளது.

இந்த புள்ளியில், இரு நாட்டு ராணுவ வீரர்கள் 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிங்கர் 4-ல் அதாவது இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஒரு கூர்மையான பாறைகள் அமைந்த கட்டமைப்பு மட்டுமே உள்ளது, இதனை கால்நடையாகவே கடக்க முடியும். இதனால் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.