கொரோனா வைரசுக்கு ‘ஆயுர்வேத மருந்து கண்டுபிடிப்பு’… மருந்தை நோயாளிக்கு கொடுத்து ஆய்வு செய்ய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி..!

Read Time:4 Minute, 48 Second

கொரோனா வைரசுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தை தொற்று நோயாளிக்கு கொடுத்து ஆய்வு செய்ய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பெரிதும் ஆழிவை ஏற்படுத்தும் அரக்கனாகியிருக்கிறது. இந்த வைரசை அழிக்க இதுவரையில் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகள் முழுவதும் வைரசுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

இந்தியாவில் பாரம்பரிய இயற்கை மருத்துவம் சிகிச்சையளிப்பில் முன்வரிசையில் நிற்கிறது. தமிழகத்தில் சித்த மருத்துவம் மூலமாக வைரஸ் தொற்றிலிருந்து பலர் குணம் அடைந்து இருக்கின்றனர். பாரம்பரியமான மருந்துகளை அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கவும் அரசு தீவிரம் காட்டுகிறது. கொரோனாவின் கொடூரத்தில் சிக்கித்தவிக்கும் உலக நாடுகள் இந்திய மருத்துகள் மீது மிகுந்த நம்பிக்கையையும் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தியா விரைவில் மருந்தினை கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கையினால் உற்று கவனித்து வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சார்பில் கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. ஆய்வை அப்பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறை நடத்தவிருக்கிறது.

ஏற்கனவே அப்பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறையில் பேராசிரியராக இருந்த எஸ்.என்.திரிபாதி என்பவர் சுமார் 40 வருடங்களுக்கு முன் சுவாச நோய்க்கான ஒரு மருந்தை கண்டுபிடித்து இருக்கிறார். சுவாச நோயாளிகளை எளிதில் குணப்படுத்தும் இந்த மருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கும் அதிக பலன் தரும் என்று கருதப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறை இதை கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு பயன்படுத்தி பரிசோதிக்க முடிவு செய்து இருக்கிறது. வாரணாசியில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரியும் உள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் இளம் வயதுள்ளவர்களுக்கு ஆயுர்வேத துறையின் சுவாச நோய்க்கான மருந்தை வழங்கி ஆய்வு செய்ய உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த 22-ம்தேதி அனுமதி அளித்து இருக்கிறது.

மருந்து தொடர்பாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறையின் டீன் பேராசிரியர் யாமினி பூஷன் திரிபாதி பேசுகையில், சுவாச நோயாளிகளுக்கு ஏற்படுவது போன்ற பாதிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உள்ளது. இதற்காக எங்கள் துறை கண்டுபிடித்த மருந்தை செயல்முறைப்படுத்த அனுமதித்ததுடன் ரூ.10 லட்சம் நிதியாகவும் ஆயுஷ் அமைச்சகம் அளித்து இருக்கிறது. இந்த திட்டத்தை ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தவிருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்.

இந்த மருந்தின் பெயர் ‘ஸ்ரீஷாதி கசாயம்’ எனப்படுகிறது. மருந்தில் ஸ்ரீசங் வசா, முலேதி, தேஜாபட்டா மற்றும் கந்தகாரி உள்ளிட்ட மூலிகைகள் கலக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இதில், தேவைக்குஏற்ப மேலும் சில மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மருந்துக்கு தேவையான மூலிகைகள் பரவலாக கிடைப்பதால் இந்த மருந்து தயாரிக்கப்பட்ட பின் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்ற் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியிருக்கிறது.