கொரோனா பரவல்: தபால் ஓட்டு போடும் வயது வரம்பு குறைப்பு… தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

Read Time:3 Minute, 14 Second

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி செல்கிறது. ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்து வருகிறது. மேலும், வைரஸ் தொற்று அக்டோபர், நவம்பரில் உச்சத்தை அடையும் என்பது நிபுணர்கள் எச்சரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிற பீகார் மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் மாதம் 29-ம் தேதி முடிகிறது. அங்கு அக்டோபர் கடைசியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பீகாரில் வைரஸ் பாதிப்பு சற்று குறைவாக காணப்படுகிறது. மாநிலத்தில் இதுவரையில் 8488 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பின்னர் இந்தியாவில் நடக்கிற முதல் சட்டசபை தேர்தலாக இது அமையும். இந்த தேர்தலில் முதல் முறையாக 65 வயது ஆனவர்களும் தபால் ஓட்டு போட வழி ஏற்பட்டுள்ளது.

இதுவரையில், இந்தியாவில் பொதுவாக ஆயுத படையினர், போலீஸ் படையினர், தேர்தல் பணி ஆற்றுகிற அரசு துறையினர் மட்டுமே தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதம், அவர்களுடன் மாற்றுதிறனாளிகள் மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரும் தபால் ஓட்டு போட அனுமதி அளித்து தேர்தல் விதிகளில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் செய்தது. தற்போது கொரோனா வைரஸ், முதியோருக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் வாக்குச்சாவடிக்கு வராமல் தபால் ஓட்டு போடுவதற்கு ஏதுவாக 80 வயது என்ற வரம்பு 65 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் வரும் பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரும் தபால் ஓட்டு போட வழி ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 19-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களும், தொற்று தாக்குதலின் சந்தேகத்துக்கு ஆளானோரும் தபால் ஓட்டு போட வழி வகை செய்யப்பட்டு உள்ளது. தேர்தலில் தபால் ஓட்டு போட விரும்புகிற மேலே குறிப்பிட்ட பிரிவினர், 12-டி என்ற பாரத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.