கிழக்கு லடாக் பகுதிக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகளை நகர்த்தும் இந்திய ராணுவம்… முழு விபரம்:-

Read Time:3 Minute, 7 Second

கிழக்கு லடாக் பகுதிக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய ராணுவம் நகர்த்துகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்திய-சீன எல்லைப் பகுதியில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியதை அடுத்து இந்திய ராணுவம் கண்காணிப்பை மேலும் விஸ்தரித்து இருக்கிறது. சீன எல்லையையொட்டிய பகுதியில் எந்தஒரு அசம்பாவித சம்பவங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படைகள் கழுகுபார்வையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. மலைப்பாங்கான இடங்களிலும் போர் புரிய வல்லமைக்கொண்ட படையை இந்தியா ஸ்திரப்படுத்தியிருக்கிறது.

இந்திய எல்லையில் விமானப்படை விமானங்களும், உளவு விமானங்களும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கிழக்கு லடாக் பகுதிக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய ராணுவம் நகர்த்துகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது. சீன போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் நகர்வுக்கு மத்தியில் சரியான பதிலடியை கொடுக்கும் வகையில் இந்திய ஆயுதப்படைகள் தங்களது மேம்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பை ஸ்திரப்படுத்துகின்றன, மேற்பரப்பில் எதிரியின் விமானங்களை துல்லியமாக தாக்கும் வகையில் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை நிறுத்தி உள்ளன.

எல்லையில் சீன ராணுவத்தின் வாலாட்டலை தடுக்கும் வகையில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்திய எல்லையையொட்டிய பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் சீன ராணுவம் படையை குவிப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் எதிரிநாட்டு வான் தாக்குதலை முறியடிக்கும் வகையில் இந்தியா நட்பு நாடுகளிடம் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் பெறவிருக்கிறது. ஆகாஷ் ஏவுகணைகளை ஏவும் வகையிலான பாதுகாப்பு கட்டமைப்பை எல்லையை நோக்கி இந்திய ராணுவம் நகர்த்துகிறது.

ஆகாஷ் ஏவுகணையால் வானில் பறந்துக்கொண்டிருக்கும் விமானத்தினை எளிதாகவும், துல்லியமாகவும் சுட்டு வீழ்த்த முடியும். மேலும் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய விமானப்படை தீவிரமான ரோந்து பணியை மேற்கொள்கிறது.