“கல்வான் பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடுவது முட்டாள்தனமானது” எல்லையை மாற்ற முயன்றால் பின்விளைவுகளை சந்திப்பீர்கள்… சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை!

Read Time:6 Minute, 44 Second

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இம்மோதல் சம்பவத்தில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது. மோதல் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவதை விரைவுபடுத்த இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்குத்தான் சொந்தம், அதில் தங்களுக்குத்தான் இறையாண்மை இருக்கிறது என்று சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடுகிறது. ஆனால், இதனை முற்றிலும் இந்தியா நிரகரித்துவிட்டது.

இந்நிலையில் “கல்வான் பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடுவது முட்டாள்தனமானது.” எல்லையில் ஏற்கெனவே இருக்கும் நிலையை சீனா மாற்ற முயற்சி செய்தால், இரு நாட்டு உறவிலும் தொடர்ச்சியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

சீனாவுக்கான இந்தியத்தூதர் விக்ரம் மிஸ்ரி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் தற்போது இரு நாட்டு ராணுவ குவிப்புக்கும் தீர்வு என்பது, சீனா கையில்தான் இருக்கிறது. படைகள் குவிப்பு போன்ற் கடுமையான நடவடிக்கையின் மூலம் எல்லையில் ஏற்கெனவே இருக்கும் நிலையை மாற்ற முடியாது என்பதை சீனா உணர்ந்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை முன்னோக்கி எடுத்து செல்வதற்கு இது உகந்த வழி கிடையது.

சீன ராணுவத்தின் கடினமான நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் குறிப்பிடத்த நம்பிக்கையை குலைத்துவிட்டது. இனிமேல், இரு நாட்டு உறவையும் எந்த திசையில் கொண்டு செல்வது என்பதை சீன தரப்பு தான் கவனித்து கொண்டு செல்ல வேண்டும். இதற்கான பொறுப்பு சீன தரப்பிடமே உள்ளது. இந்தியா –சீனா இருதரப்பு உறவில் முன்னேற்றத்துக்கு எல்லையில் அமைதி மற்றும் வன்முறையற்ற சூழலை பராமரிப்பது எனபது மிகவும் அத்தியாவசியனது.

இப்பிரச்சினையில் தீர்வை நோக்கித்தான் இந்தியாவின் செயல்பாடு இருக்கிறது. ஆதலால், இந்திய வீரர்கள் வழக்கமாக ரோந்து பணிக்கு செல்லும்போது கூட இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் தடையை ஏற்படுத்துதலை சீன தரப்பு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பான கேள்விக்கும் அவர் விரிவான பதிலை அளித்துள்ளார். அதில், “கல்வான் பள்ளத்தாக்கை சீனா உரிமை கொண்டாடுவது முட்டாள்தனமானது என்று காட்டமாக குறிப்பிட்டு இருக்கிறார்.”

சீனாவின் உரிமை கோரலை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தற்போதுள்ள சூழலை அமைதிப்படுத்த உதவாது எனக் கூறியிருக்கிறார் மிஸ்ரி.

எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் தரப்பில் எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், எப்போதுமே எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்.ஐ.சி) மீறி செய்வது கிடையாது. எனவே, சீன ராணுவம் தற்போது எல்லையில் இருக்கும் நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் ஒருபோதும் கவலைப்படாத ஒரு பிரிவில் அவர்கள் திடீரென அவ்வாறு செய்வது மிகவும் வியப்பாக அமைந்து இருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சீரமைப்பு குறித்து இந்தியா தெளிவாகவும், விழிப்புடனும் இருக்கிறது. நீண்ட காலமாகவே இப்பகுதியில் ரோந்து செல்லும் இந்திய ராணுவம் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல், யாருக்கும் இடையூறு செய்யாமல் சென்று வருகிறது என குறிப்பிட்டு உள்ளார்.

“எல்லையில் இப்போதுள்ள சூழல் உருவாவதற்கு சீன ராணுவத்தின் செயல்பாடுகள்தான் காரணம் என்பது தெளிவாக தெரிகிறது. ஏப்ரல் முதல் மே மாதத்திலிருந்து எல்லைப்பகுதியிலும் சீனாவின் நடவடிக்கை அதிகரித்து உள்ளது. நம்முடைய ராணுவம் ரோந்து பணிக்கு செல்வதிலும், பாதுகாப்பு பணிக்கு செல்வதிலும் சீன ராணுவம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து உள்ளது. இதுதான் எல்லையில் பதற்றத்துக்கான முக்கிய காரணமாகும்.

இருதரப்பு உறவு என்பது இரு நாடுகளுக்கும் முக்கியமானது. எல்லையில் தற்போதிருக்கும் நிலையை சீனா மாற்ற முயன்றால் அது எல்லைப்பகுதியில் அமைதியை மட்டும் குலைக்காது, இரு நாட்டு உறவிலும் தொடர்ச்சியான பின்விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என எச்சரித்தார். சீனா தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.