இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15,500-ஐ தாண்டி செல்கிறது.
உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி வைரசான கொரோனாவின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுகிறது. கடந்த சில நாட்களாக ஒருநாள் வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியே இருக்கிறது. இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், புதிதாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 18,552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 384 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது.
இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 15,685 ஆக அதிகரித்து உள்ளது. இதில், 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் நீரிழிவு மற்றும் இருதய நோய் உள்ளிட்ட பிற நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கொரோனாவால் நாட்டில் பலியானவர்களில் 7,106 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அங்கு 1,52,765 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேசிய தலைநகரான டெல்லியில் இந்த வைரஸ் 2,492 பேரின் உயிரை பறித்துள்ளது. அங்கு பாதிப்பு 77,240 ஆக உள்ளது. து.
தமிழகத்தில் 957 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக இருக்கிறது. குஜராத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், அதில் 2,95,881 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,97,387 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.