சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: “ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையானது” நாடு முழுவதும் கொந்தளிப்பு…

Read Time:5 Minute, 1 Second

சாத்தான் குளத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான #JusticeForJeyarajAndFenix
ஹேஷ்டேக்கில் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள செய்தியில், “சில போலீசார் சட்டம் ஒழுங்கை தனது கையில் வைத்துக்கொண்டு தவறாக செயல்படுகின்றனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஜெயராஜ், பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது” என்று தெரிவித்து உள்ளார்.

நடிகையும், அரசியம் பிரமுகருமான குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் குற்றவாளிகளை தாமதம் இன்றி தண்டிக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது. அந்த குடும்பத்தினர் பாசமானவர்களை இழந்து உள்ளனர். தமாதமாகும் நீதி மறுக்கப்படும் நீதியாகும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்தியில், “சாத்தான் குளத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது. மனித இனத்துக்கே மிகவும் வெட்க கேடானது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சில மனிதர்கள் வைரசை விட ஆபத்தானவர்கள்” என்று கூறி உள்ளார்.

டி.இமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களை கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது. முழுக்க, முழுக்க மனிதத்தன்மையற்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரக்கமற்ற நடைமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிளாய்ட்” என பதிவிட்டு உள்ளார்.

நடிகர் ஜெயம்ரவி, “சட்டத்தின் முன்னால் யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது. இந்த மனித தன்மையற்ற செயலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

நடிகர் சாந்தனு வெளியிட்டுள்ள பதிவில், “இந்த குடும்பத்துக்கு நீதி தேவை” என்று பதிவிட்டு உள்ளார்.

நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ள பதிவில், ‘’ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோருக்கு நடந்துள்ள குரூரத்தை அறிந்து மிகவும் கலங்கினேன். போலீஸ் துறைக்கும் நமது தேசத்துக்கும் இந்த வெறிபிடித்தவர்கள் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். குற்றவாளிகள் தப்பிக்க கூடாது. நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று கூறி உள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘’சாத்தான்குளம் சம்பவம் கொடூரமான மிருகத்தனமான செயலாகும்.” என்று கூறியுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் பயங்கரமானது. இது முற்றிலும் மனிதாபிமானமற்றது. உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. தாமதிக்கப்படும் நீதி அநீதி என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகையும் பின்னணி பாடகியுமான சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில், “சாத்தான் குளம் சம்பவம் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட கொடுமைக்கு இணையானது. இதற்கு காரணமான காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதும் இடமாற்றம் செய்யப்பட்டதும் பிரச்சினைக்கு தீர்வாக இருக்காது” என்று கூறி உள்ளார்.

நடிகர் ஜீவா தனது ஜிப்ஸி படத்தின் பாடல் வரிகளான “வெரி வெரி பேட்..பேட் டூ த கோர்” என்ற பாடல் வரிகளை பதிவிட்டு உள்ளார். #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பாதிக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும் என்ற கோரிக்கையை கடுமையாக வலியுறுத்தி வருகிறார்கள்.