ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்:‘எந்தவொரு மனிதருக்கும் இதுபோன்ற கொடுமை நிகழக்கூடாது’ சாத்தான்குளம் சம்பவத்துக்கு பிரியங்கா சோப்ரா கடும் கண்டனம்!

Read Time:2 Minute, 41 Second

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ‘எந்தவொரு மனிதருக்கும் இதுபோன்ற கொடுமை நிகழக்கூடாது’ என கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #JusticeForJeyarajAndFenix ஹேஷ்டேக்கில் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். காவல்துறையின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கிறது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து உள்ளன. காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

நடிகை பிரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,

”நான் கேள்விப்பட்டு கொண்டிருக்கும் விஷயங்கள் மிகவும் அதிர்ச்சியையும், சோகத்தையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிற்து. எந்தவொரு மனிதருக்கும் இந்த கொடுமை நிகழக்கூடாது, அவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி. இதற்கு காரணமான குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும்.

அந்த குடும்பத்தினர் இப்போது எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்யப்பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

https://twitter.com/suchi_mirchi/status/1276218996602228737