நிறவெறி, இனவெறி எதிர்ப்பு காரணமாக “Fair & Lovely” பெயரை மாற்றம் செய்யப் போவதாக அறிவித்தது – ஹிந்துஸ்தான் லீவர்

Read Time:2 Minute, 57 Second

ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியின் தயாரிப்பான ஃபேர் அண்ட் லவ்லி-ன் பெயரை மாற்றம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் நிறவெறி காரணமாக போலீஸாரால் கொல்லப்பட்டார் கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்ட். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தொடரும் நிறவெறிக்கு எதிரான பெரும் போராட்டமாக மாறியது. இந்தப் போராட்டத்திற்கு உலக தலைவர்கள் பலர் ஆதரவு குரல் கொடுத்தனர்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கும் இனவெறி மற்றும் நிறவெறி எதிர்ப்பு போராட்டங்களின் காரணமாக சிவப்பழகு க்ரீம்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும் உலக மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்தியாவில் விற்கப்படும் சிகப்பு நிறத்தை ஊக்குவிக்கும் கிரீம்களில் விற்பனையை நிறுத்த போவதாக அறிவித்தது. மேலும் ஆசியாவில் விற்கப்படும் தோல் வெண்மை கிரீம்களையும் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி ஃபேர் அண்ட் லவ்லி அழகுசாதன பொருளின் பெயரில் உள்ள ‘ஃபேர்’ என்ற சொல்லை நீக்கி புதிய பெயரில் விற்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Fair, White, Light உள்ளிட்ட வார்த்தைகள் சிவப்பாக இருப்பதே அழகு என பொருள்படும்படி தெரிவதால் ஹிந்துஸ்தான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இத்தனை ஆண்டுகளாக தங்கள் தயாரிப்பை பயன்படுத்தி சிகப்பழகை கூட்டலாம் என்று விளம்பரப்படுத்தி வந்த நிலையில் தற்போது பெயரை மாற்றுவதற்கான முடிவெடுத்துள்ளது ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் “ஃபேர் அண்ட் லவ்லி” ஆண்டிற்கு ஏறக்குறைய 560 மில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பெயர் என்ன என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பெயரை மாற்றும் முடிவுக்கும் விற்பனை நிறுத்தத்துக்கும் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.